கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்திருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள 18 பேரும் தங்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இன்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குண்டர் தடுப்பு சட்டம் காலதாமதமாக போடப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவே குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ள நிலையில் இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் வைப்பதால் என்ன பயன்? மதுவிலக்கு காவலர்கள் பதிவு செய்யும் வழக்குகளில் பாதி ஜோடிக்கப்பட்டவை. கள்ளச்சாராய விற்பனை என்பது பல வருடங்களாக அந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்காக இருக்கும் மதுவிலக்குதுறை என்ன செய்து கொண்டிருக்கிறது' எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'தவறு செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது' என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கு தொடர்பாக தெரிவிக்கையில் 'இந்த வழக்கு சிபி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால் ஆவணங்கள் சிபிஐக்கு ஒப்படைக்கப்பட இருக்கிறது' என தெரிவித்தார். இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி, 60-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிராமம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 18 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.