சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று முன் தினம் (03-01-25) தமிழக பாஜக மகளிர் சார்பில் அணி போராட்டம் மதுரையில் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.கவைச் சேர்ந்த மகளிர் அணியினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு செல்வதாக இருந்தது. அந்த வகையில், பா.ஜ.க திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் பழனியில் இருந்து மதுரைக்கு செல்வதாக இருந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது, அருகில் இருந்த மதுபான கூடத்திற்கு 50 பெண்களுடன் கனகராஜ் உள்ளே சென்று, அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே மதுக்கூடம் திறக்கப்பட்டு இயங்குவதாகவும், 24 மணி நேரமும் மதுக்கூடம் செயல்படுவதாக குற்றம்சாட்டி கனகராஜ் வீடியோ வெளியிட்டார். இதனையடுத்து, தனியார் மதுபான கூடத்திற்கு அத்துமீறு நுழைந்ததாகவும், பணியாளர்களை மிரட்டியதாகவும் கனகராஜ் மீது பழனி டவுன் காவல்துறையினர் 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இன்று மாலை கொடைக்கானல் சென்றுவிட்டு காரில் பழனிக்கு திரும்பிக் கொண்டிருந்த பா.ஜ.க திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜை, பழனியில் உள்ள ஐயம்புள்ளி சோதனைச்சாவடியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.