மருத்துவர் ராமதாஸ் மேற்கொள்ள இருக்கும் பயணம் குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா அவரிடம் விவாதிக்க உத்தேசித்து இருப்பதாகக் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் நான் மிகவும் மதிக்கக்கூடிய தலைவர் ஒரு யாத்திரை போகப்போவதாக சொல்லியுள்ளார். யாத்திரையின் பெயர் ‘தமிழைத் தேடி’. டாக்டர் ராமதாஸ் இந்த யாத்திரையை மேற்கொள்ளப்போவதாக சொல்லியுள்ளார். தமிழைத் தேடி யாத்திரை என்று சொன்னால் தமிழ் தொலைந்துவிட்டது என்று அர்த்தம்.
நாம் தேடும் பொழுது அதை தொலைத்த திருட்டுப்பயல் யார் என்பதையும் புரிந்துகொண்டு செல்ல வேண்டும். அதைத் தொலைத்தது திராவிடம். திராவிடத்தால் தமிழ் தொலைந்தது. அதைத் தேடி ராமதாஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருக்கு வாழ்த்துகள். தமிழை எங்கே தேடினால் கிடைக்கும் என்பது குறித்தும் அவரிடம் பேச உத்தேசித்துள்ளேன். ஈரோடு இடைத்தேர்தல் குறித்து 31 ஆம் தேதி மாநில குழு கூடுகிறது. அதில் முடிவாகும்” எனக் கூறினார்.