Skip to main content

“பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் அதிமுகவினர் அல்ல - இபிஎஸ் கண்டனம்

Published on 05/05/2025 | Edited on 05/05/2025

 

 EPS condemns Those who are afraid of are not AIADMK members

அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ள எம்ஆர்எப் (MRF) தொழிற்சாலையில் பணிபுரிந்து தற்காலிக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில், அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ சு.ரவி, முன்னாள் எம்.பி கோ அரி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலை நுழைவுவாயில் முன்பாக இன்று (05-05-25) காலை நுழைவு வாயில் கூட்டம் நடத்த வந்தனர். 

அப்போது அங்கிருந்த போலீசார், ஆலை நுழைவு வாயில் கூட்டம் நடத்தம் நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக கூறினர். இருப்பினும், தடையை மீறி அதிமுக எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அங்கு நுழைவு வாயில் கூட்டம் நடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிமுக எம்.எல்.ஏ சு.ரவி, முன்னாள் எம்.பி கோ அரி உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். 

இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘அரக்கோணம் எம்ஆர்எப் (MRF) அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு. இரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ. அரி உள்ளிட்ட கழக நிர்வாகிகளை திமுக மு.க.ஸ்டாலின் மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன். 

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் கழகத்தினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்