Skip to main content

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க மறுத்த எடப்பாடி பழனிசாமி

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

edapadi palanisamy refused to stay at delhi tamilnadu house

 

வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை நல்கும் வகையில் கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜி20 அமைப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என இருபது நாடுகள் இதன் உறுப்பினர்களாக உள்ளன. ஜி20 அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஒவ்வொரு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், டெல்லியில்  2023  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் அதன் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பின் மூலம் ஜி20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசு அதற்கான முன்னேற்பாடு பணிகளை தற்போதிருந்தே தொடங்கியுள்ளது.

 

இந்த உச்சி மாநாட்டுக்கு முன்னதாக நாட்டின் பல பகுதிகளிலும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னேற்பாடு கூட்டங்களை நடத்த முடிவு செய்து, அது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு டெல்லியில் நேற்று நடத்தியது. கூட்டத்தின் போது மாநாட்டின் முக்கிய அம்சமாக,  தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரிவுகளில் ஜி20 கூட்டமைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில், ஜி20 உச்சி  மாநாடு திட்டங்கள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜூன  கார்கே மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இருவரும் நேற்று டெல்லி சென்றிருந்தனர். பொதுவாக அரசு முறை பயணமாக டெல்லி செல்லும் மக்கள் பிரதிநிதிகள், அரசு செயலாளர்கள், மற்ற உயர் அதிகாரிகள் அங்கு உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது வழக்கம். தமிழ்நாடு இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அங்கு தாங்காமல் தனியார் விடுதியில் தங்கி இருந்தார். எதிர்க்கட்சி தலைவருக்கு என  தனியாக அறைகள் இருக்கும் போது, அவர் அங்கு தாங்காமல் தனியார் விடுதியில் தங்கி இருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arvind Kejriwal enforcement department extension

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.