Skip to main content

11 மணிக்கு திருச்சி வருகிறார்... 3 மணிக்கு மேடை ஏறுகிறார்... திருச்சி திமுக பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்...

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

பிப்ரவரி மாதத்தில் திமுகவின் திருச்சி மாநாடு நடக்கும் என திமுகவினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குத் தேர்தல் தேதியை அறிவித்ததாலும், தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்ததாலும் மாநாடாக நடத்த முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து அந்த மாநாடு, பொதுக்கூட்டமாக மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

பல லட்சம் ரூபாய் செலவில், 700 ஏக்கர் பரப்பளவில், பல மாதங்களாக திட்டமிட்டு, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் என்ற இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடம் முழுவதும் திட்டமிட்டபடி மாநாட்டுப் பணிகள் நடைபெற்றது. 

 

தேர்தல் அறிவிப்பினால் இந்த மாநாட்டை ‘தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்’ என்று பொதுக்கூட்டமாக மாற்றி, மார்ச் 7ஆம் தேதி (நாளை) நடத்த திட்டமிட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்தப் பொதுக்கூட்டம் நாளை (7ஆம் தேதி) காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 8 மணி வரை நடைபெறும் என்றும், அந்தக் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தின் மூலம் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

 

காலை 11 மணிக்குத் திருச்சிக்கு வருகை தரும் ஸ்டாலின், மதியம் 3 மணிக்கு விழா மேடைக்கு வர உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறாமல் பல்வேறு கட்டுப்பாடுகளோடு இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டால் வழக்குகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் கவனமாக இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்கின்றனர் அக்கட்சியினர். 

 

 

சார்ந்த செய்திகள்