
நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் கட்ட அமர்வு கடந்த 10ஆம் தேதி (10.03.2025) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக எம்.பி.க்கள் இன்று (25.03.2025) பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதன்படி ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது குறித்து நேரமில்லா நேரத்தில் விவாதிப்பதற்காக, கனிமொழி எம்.பி. இன்று மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்து கேள்வி நேரத்தில் தன் கேள்விகளை முன்வைத்தார். அவரை தொடர்ந்து அத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தது குறித்து மக்களவையில் நேரமில்லா நேரத்தில் வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்தும், பொள்ளாச்சி கே. ஈஸ்வரசாமியும் பேசினார்கள்.
கடல்சார் சுற்றுச்சூழல் வளங்களின் நலனை பாதுகாக்கும் மற்றும் மீனவர்களின் பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதைக் குறிக்கும் ‘நீலப் பொருளாதாரம்’ குறித்து டி. ஆர். பாலு எம்.பி. மக்களவையில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். மீனவர்கள் மற்றும் பிற கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்திற்கு காலநிலை மாற்றத்தால் தொடர்ந்து ஆபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் நீலப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் இது தொடர்பாக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) வழங்கியுள்ள உதவிகள் குறித்தும் ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சரிடம் டி. ஆர். பாலு எம்.பி. பதில் கோரியுள்ளார். தமிழ்நாட்டில், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. (SC/ST/OBC) மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைத் திட்டங்களின் விவரங்கள் கேட்டு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி. மக்களவையில் கேள்வி கேட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இந்த உதவித்தொகைகளால் பயனடைந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை கேட்டுள்ள ஆ. ராசா, தகுதியான மாணவர்களுக்கு இந்த உதவித்தொகைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உதவித்தொகையை பெறுவதற்கான வழிகளை எளிமையாக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். பிரதமர் ஏழைகள் நலத்திட்டம் (PMGKAY) தொடங்கப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக உணவு தானியங்களைப் பெற்ற மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை குறித்து எம். எம். அப்துல்லா எம்.பி. மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் இத்திட்டத்தின்கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீடற்ற நபர்கள் மற்றும் தினசரி கூலி பெறுபவர்கள் போன்ற பொருளாதார ரீதியாக அடித்தட்டும் மக்களுக்கு கூடுதல் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதா?.
அப்படியானால் அவர்களை இத்திட்டம் சென்றடைய பின்பற்றப்பட்ட விநியோக வழிமுறையின் விவரங்கள் மற்றும் தமிழ்நாட்டில், குறிப்பாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இத்திட்டத்தை கொண்டு செல்ல மற்றும் அதன் செயல்திறனை மேம்படுத்த ஒன்றிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன எனவும் அவர் அதில் கேட்டுள்ளார். தமிழ்நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ள தீர்மானம் குறித்தும், இந்தியாவில் அண்மைகாலமாக அதிகரித்து வரும் மனநலன் பிரச்சினைகளை கருத்தில் கொண்டும் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி சோமு எம்.பி. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வு அமைச்சகத்திடம் இரு வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ள சுகாதார தீர்மானத்தை முன்வைத்து ஒன்றிய அரசு இதுவரை திட்டங்கள் வகுத்திருந்தால் அதன் விவரங்களையும் அதற்கான நிதி உதவியையும் வெளியிட வேண்டும் என கேட்டுள்ள அவர், நாட்டில் மிகக் குறைந்த அளவிலேயே மனநலப் பராமரிப்பு நிபுணர்கள் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி ஒன்றிய அரசு அதை பற்றி அறிந்திருக்கிறதா எனவும், நாட்டில் மனநலப் பிரச்சினைகளை முறையாக நிவர்த்தி செய்வதற்கும், மனநலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய சமூக களங்கத்தைக் குறைப்பதற்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா அப்படியிருந்தால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் மனநலத்திற்கான தற்போதைய செலவுகள் குறித்த விவரங்கள் என்ன என்றும் கேட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இளம் வயது இறப்பு அதிகரித்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள திமுக எம்.பி. ஆர். கிரிராஜன் அதுபற்றி நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். கோவிட் தொற்றுநோய்க்கு பிறகு நாட்டு மக்களிடையே நுரையீரல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் கோளாறுகளால் ஏற்படும் இறப்பு திடீரென அதிகரித்துள்ளதை அரசாங்கம் தீவிரமாகக் கவனிக்கின்றதா? அப்படியானால், அதன் விவரங்களை வெளியிடுக என்றும் கோவிட் தொற்றுநோய்களின்போது மக்களுக்கு வழங்கப்பட்ட மருந்துகளினால் ஏற்பட்ட பக்க விளைவுகள் குறித்து அரசாங்கம் நடத்தியிருக்கும் ஆய்வுகளை வெளியிடவும் அவர் கேட்டுள்ளார்.
டி. மலையரசன் எம்.பி. தமிழ்நாட்டில் பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் (PMGSY) சாலைகள் கட்டுவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் பிற சிக்கல்களில் ஏதேனும் சவால்கள் எதிர்கொள்ளப்பட்டுள்ளதா, அப்படியானால், அத்தகைய சிக்கல்களைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் மற்றும் தமிழ்நாட்டில் திட்டத்தை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள், மற்றும் அவற்றிற்கான காலக்கெடு ஆகியவை குறித்தும் விவரங்கள் வெளியிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.