
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி விலைமாதர்கள் பற்றிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாக ஆபாசமாக பேசியது தொடர்பாக அவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுக் கண்டிக்கப்பட்டு வந்தது.
திமுகவிலேயே இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 'எக்ஸ்' வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது' என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து பேசி பொன்முடி சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில் இந்த விவகாரமும் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த சர்ச்சை பேச்சின் எதிரொலியாக திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து பொன்முடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் திமுகவின் துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

ஆபாச சர்ச்சை பேச்சு காரணமாக பொன்முடியின் துணைச் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருக்கும் நிலையில் அண்மையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை கலைஞர் கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும்-வருத்தமும் அடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.