
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது.
இடைத்தேர்தல் தொடர்பாக நேற்று ஓ.பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டமானது இன்று நடைபெற்றது. பாஜக தன் நிலையைத் தெளிவுபடுத்தாத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன; இடைத்தேர்தலில் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், கே.பி.முனுசாமி, ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னையில் நேற்று நடந்த ஓபிஎஸ் தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில், ‘இபிஎஸ் வேட்பாளரை அறிவித்த பின் நாம் நம்முடைய வேட்பாளரை அறிவிக்கலாம்’ என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.