ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அமீர் கான், நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என ஏகப்பட்ட பேர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கூலி படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் தாய்லாந்து செல்வதற்கு இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர், அங்கிருந்த செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் அவர், “கூலி படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது. இப்போது 13ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை சூட்டிங் இருக்கு” என்று கூறினார். இதையடுத்து, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வியை செய்தியாளர்கள் முடிக்கும் முன்பே குறுக்கிட்ட ரஜினிகாந்த், “அரசியல் கேள்விகளை கேட்க வேண்டும் என்று நான் ஆல்ரெடி சொல்லி இருக்கேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.