2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று (06-01-25) தொடங்கியது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அ.தி.மு.க எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அ.தி.மு.க எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல், சட்டப்பேரவைக்குள் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டுச் சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறியது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் அவமதித்ததாகக் கூறி திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (07-01-25) நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில், நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி, தயாநிதி மாறன் எம்.பி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதிமுக- பா.ஜ.க ரகசிய கூட்டணியில் இருப்பதாகக் கூறியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.