Skip to main content

பா.ஜ.க.வினர் வெட்கப்பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

 

அமித்ஷாவை தேசிய தலைவராக பெற்றுக் கொண்டதற்காக பா.ஜ.க.வினர் வெட்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தூத்துக்குடியில் உரையாற்றும் போது நாடாளுமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பேசியிருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றி வாய்ப்பு குறித்து கனவு காண்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதேநேரத்தில் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற கருத்துக்களை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். இக்கூட்டணியில் போட்டியிடுகிற சிலர் ஊழல்வாதிகள் என்று கூறியிருக்கிறார். இவரது வாதத்தின்படி யார் ஊழல்வாதிகள் ? 2ஜி ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்தை அடிப்படையாக வைத்து பா.ஜ.க. கூட்டணியினர் தேர்தலில் அரசியல் ஆதாயம் அடைந்ததையும் எவரும் மறந்திட இயலாது. 

 

KS-Alagiri


 

ஆனால் 2ஜி வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுத்துறையின் சிறப்பு நீதிமன்றம் குற்றத்தை நிருபிக்க ஆதாரங்களை கேட்டு நீதிபதி ஓ.பி. சைனி மாதக்கணக்கில் காத்திருந்ததாகவும், எந்த ஆதாரமும் இல்லாத காரணத்தால் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ஆ. ராசா போன்றவர்களை நிரபராதிகள் என அறிவித்து விடுவிப்பதாக தீர்ப்பு வழங்கினார். அதேபோல, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திரு. கார்த்தி சிதம்பரத்தை பற்றியும் அமித்ஷா அவதூறான கருத்தை கூறியிருக்கிறார். 
 

அரசியல் ரீதியாக நரேந்திர மோடி அரசை கடுமையாக விமர்சனக் கணைகளை ஏவுகனைகளாக ஏவி வருகிற முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களின் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்களை மறுக்க முடியாத பா.ஜ.க.வினர் அவதூறு சேற்றை அள்ளி வீசி வருகிறார்கள். இத்தகைய துல்லிய தாக்குலை தாங்க முடியாத பா.ஜ.க.வினர் இதற்காக திரு. கார்த்தி சிதம்பரம் அவர்கள் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இவரை கைது செய்ய மத்திய அரசு துடித்தது. ஆனால், அவரை கைது செய்வதாக இருந்தால் ஆதாரங்களை வழங்குங்கள் என்று நீதிபதி பலமுறை கூறியும் மத்திய அரசின் வழக்கறிஞரால் ஆதாரத்தை வழங்க முடியவில்லை. அதனால் தான் திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. 
 

எனவே, திரு. கார்த்தி சிதம்பரம் மீது இருப்பது மத்திய பா.ஜ.க. அரசு தொடுத்திருக்கும் குற்றச்சாட்டே தவிர, வழக்கல்ல. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் எந்த நீதிமன்றத்திலும் விசாரணையும் நடைபெறவில்லை. இந்நிலையில் அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவதற்கு அமித்ஷாவுக்கு என்ன தகுதியிருக்கிறது ? உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்த போது குஜராத் கலவரத்தில் சம்மந்தப்பட்டதால் சிறப்பு புலனாய்வுக்குழு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. 

 

அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில் குஜராத்திற்குள் நுழையக் கூடாது, மும்பையில் தங்கி நாள்தோறும் காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற அடிப்படையில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய குற்றப் பின்னணி கொண்ட ஒருவரை தேசிய தலைவராக பெற்றுக் கொண்டதற்காக பா.ஜ.க.வினர் வெட்கப்பட வேண்டும். அதற்கு மாறாக அப்பழுக்கற்ற காங்கிரஸ் - தி.மு.க. கட்சியினர் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் கூறுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 

பணமதிப்பு இழப்பு அமல்படுத்தப்பட்ட போது அமித்ஷா தலைமையில் குஜராத் மாநிலத்தில் இயங்கிய கூட்டுறவு வங்கிகளில் ரூபாய் 780 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. இதன்மூலம் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டது. இத்தகைய ஊழலை செய்த அமித்ஷா காங்கிரஸ் கட்சியினர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறலாமா?
 

மேலும் கூட்டத்தில் பேசும் போது ‘பாகிஸ்தான் தாக்குதலுக்கு பழிவாங்க வேண்டுமா ? வேண்டாமா ? என்று கூட்டத்தைப் பார்த்து அமித்ஷா கேட்டுள்ளார். இந்தியாவை ஆளுகிற கட்சியின் தலைவராக இருக்கிற அமித்ஷா இப்படி தரம் தாழ்ந்து பேசுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இவர் பாகிஸ்தானை பழிவாங்க வேண்டுமென்று நினைக்கிறாரா ? மாறாக சிறுபான்மை மக்களை பழிவாங்க வேண்டுமென்பதற்காக பாகிஸ்தான் பெயரை குறிப்பிடுகிறாரா? மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சி தமிழகத்தில் எடுபடாது என்பதை அமித்ஷாக்கள் உணர வேண்டும். ஏனெனில் இது தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள் தமிழக அரசியல் களம் பண்படுத்தப்பட்டதால் வகுப்புவாத சக்திகளால் எக்காலத்திலும் காலூன்ற முடியாது என்பதை உணர வேண்டும்.
 

எனவே, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பா.ஜ.க.வோடு கூட்;டணி சேர எந்த கட்சியும் முன்வராத நிலை இருந்தது. இந்நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி சாம, பேத, தான, தண்டங்களை  கடைப்பிடித்து அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் கூட்டணியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்படி கூட்டணி அமைத்தவர்கள் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்த காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைப் பற்றி பேச பா.ஜ.க.வினருக்கு என்ன உரிமை இருக்கிறது? இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.