Skip to main content

வன்முறையை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு; உதவி செய்ய 10 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்த மேற்குவங்கம்!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

MAMATA BANERJEE

 

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. அதேசமயம், தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து திரிணாமூல் காங்கிரஸ் - பாஜகவினரிடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதல் வன்முறையாக மாறி சில நாட்கள் தொடர்ந்தது. இந்த வன்முறையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும், வீடுகள் கொளுத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் தாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

 

இதனையடுத்து, தேர்தலுக்குப் பிந்தைய இந்த வன்முறை தொடர்பாகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனைத்தொடர்ந்து கொல்கத்தா உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், தேர்தலுக்குப் பிறகான இந்த வன்முறை குறித்து விசாரிக்கத் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவொன்று அமைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஆய்வு செய்த இந்தக் குழு, சட்டம் ஒழுங்கை சரியாக கையாளவில்லை என மம்தா தலைமையிலான அரசைக் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு வன்முறைச் சம்பவங்களை சிபிஐ விசாரிக்க வேண்டுமென பரிந்துரை செய்தது.

 

ஆனால், தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவின் அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் கூறிய மேற்கு வங்க அரசு, குழுவில் இடம்பெற்றுள்ள சிலருக்குப் பாஜகவுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. இருப்பினும் கடந்த 19ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின்போது நடைபெற்றதாக கூறப்படும் கொலை, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வன்முறையின்போது நடைபெற்றதாக கூறப்படும் கிரிமினல் குற்றங்களை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்து உத்தரவிட்டது.

 

இதனையடுத்து மேற்குவங்கத்தில் விசாரணையைத் தொடங்கிய சிபிஐ, இதுவரை 30க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இந்தநிலையில் நேற்று மேற்குவங்க அரசு, "சிபிஐ மத்திய அரசின் உத்தரவின் பேரில் செயல்படுகிறது. திரிணாமூல் கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது" என கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

 

இந்தநிலையில் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு விசாரணையில் உதவ மண்டல வாரியாக 10 ஐபிஎஸ் அதிகாரிகளை மேற்குவங்க அரசு நியமித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்