இந்தியா ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான 27 வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நீல நிறமும், வெள்ளை நிறமும் இருக்கும் வகையில் தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில் ரயிலின் பெரும்பாலான பகுதி வெள்ளை நிறத்தில் இருப்பதால் விரைவில் வெள்ளை நிறம் மங்கி விடுவதால் பராமரிப்பு செய்வதில் ஏராளமான சிக்கல்கள் ஏற்படுவதாக ரயில்வே தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. இதனால் வந்தே பாரத் ரயில்களை வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ள ரயில்களில் பெரும்பான்மையான பகுதிகள் நிறம் காவி நிறத்திலும், ரயில் கதவு பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் அதிகம், குறிப்பிட்ட முக்கிய நிறுத்தங்களில் நிற்காமல் செல்வது, கால்நடைகள் மோதலால் ரயிலின் முகப்பு பகுதி பாதிக்கப்படுதல் போன்ற குறைகளை போக்க மக்கள் மத்தியில் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் புதிய வந்தே பாரத் ரயில்களின் தோற்றத்தில் காவி வண்ணத்திற்கு மாற்றம் செய்வதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து கூறுகையில் காவி தேசியக் கொடியில் இருக்கும் நிறம் என்பதால் தேர்வு செய்ததாக விளக்கமளித்துள்ளார்.