
தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து மாதங்கள் கோதுமை வழங்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய உணவுக் கழகம் குறைந்த அளவே கோதுமையைக் கொள்முதல் செய்ததால், கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 11 மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் கோதுமையின் அளவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம், கேரளா, பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் வரும் செப்டம்பர் மாதம் வரை கோதுமை விநியோகிக்கப்படாது என மத்திய அரசின் உணவு அமைச்சகம் கூறியுள்ளது.
அதேநேரம், உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, இந்த மாநிலங்களுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் கரோனா பெருந்தொற்று காலத்தில் தொடங்கப்பட்ட நிலையில், 80 கோடி பேருக்கு மாதத்திற்கு ஐந்து கிலோ உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.