Skip to main content

'ஒருபோதும் சமரசம் இல்லை; நம்பிக்கை வலிமையானது' - மோடி பேச்சு

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
'There is never compromise; Faith is strong'-Modi speech

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

இந்நிலையில் பாஜக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் பழைய நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மோடி வந்திருந்த பொழுது எம்பிக்கள் அனைவரும் 'மோடி... மோடி...' என முழுக்கமிட்டு அவரை வரவேற்றனர். தொடர்ந்து பேசிய பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 'தனது வாழ்க்கையை நாட்டுக்காகவே அர்ப்பணித்துள்ளார் மோடி. அனைவருக்கும் அனைத்தும் என்ற நோக்கத்துடன் பாஜக கூட்டணி அரசு செயல்படும். கடந்த 10 ஆண்டுகளில் யாரும் நினைத்துப் பார்க்காத வளர்ச்சியை மோடி வழங்கி உள்ளார்' என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், ''இந்தக் கூட்டணி நிபந்தனையில் உருவான கூட்டணி இல்லை அர்ப்பணிப்பில் உருவான கூட்டணி. என்.டி.ஏ கூட்டணி அரசுக்கு எந்தவித அழுத்தமும் கிடையாது. அறுபது ஆண்டுகள் கழித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்று புதிய சாதனைப் படைத்துள்ளோம். மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு நான் முன்மொழிகிறேன்'' என்றார்.

மோடியின் பெயரை உச்சரித்ததும் தேசிய ஜனநாயகக்  கூட்டணியின் எம்பிக்கள் 'மோடி... மோடி..' என முழக்கமிட்டனர். பின்னர் பேசிய அமித்ஷா மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு வழிமொழிந்ததோடு நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, 'பிரதமர் மோடியின் பத்தாண்டுகள் ஆட்சியில் மகத்தான வளர்ச்சியை நாடு அடைந்துள்ளது. உலக அளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி' எனப் புகழாரம் சூட்டி பேசினார்.

தமிழகத்தில் இருந்து என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் கலந்து கொண்டு எழுந்து நின்று கைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

'There is never compromise; Faith is strong'-Modi speech

இறுதியாக தனது உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி, ''பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 10 மாநிலங்களில் 7-இல் அதிக ஆதரவு கிடைத்துள்ளது. என்.டி.ஏ  கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ள நம்பிக்கை வலிமையானது. தேர்தலுக்கு முன்பே உருவான கூட்டணி வெற்றிகரமாக ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை. 30 ஆண்டுகளில் தற்போது அமைந்துள்ள என்டிஏ கூட்டணிதான் வலிமையானது. தேசத்தின் வளர்ச்சியில் ஒருபோதும் சமரசம் இல்லை. தேசமே முதன்மையானது. அனைத்து முடிவுகளிலும் ஒருமித்த கருத்து எட்டுவதே எங்கள் கூட்டணி என் நோக்கம். என்.டி.ஏ என்றால் சிறப்பு நிர்வாகம் என்ற பொருள். அரசு எப்படி நடக்கிறது? எதனால் நடக்கிறது? என்பது இப்போதுதான் மக்களுக்கு தெரிந்துள்ளது. இந்தக் கூட்டணி, ஆட்சிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல தேர்தலுக்கு முன்பே அமைந்த கூட்டணி. ஒரு அரசை நடத்துவதற்கு ஒருமித்த கருத்துதான் அவசியம்; பெரும்பான்மை முக்கியமல்ல. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சமமானவை தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சுழன்று அடிக்கும் நீட் முறைகேடு; மோடிக்கு மம்தா எழுதிய திடீர் கடிதம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
neet scam; Sudden letter written by Mamata to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நேற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. 1563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 813 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

neet scam; Sudden letter written by Mamata to Modi

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், 'மாணவர்கள் நலனை மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் நம்பிக்கைக்கு இது மிகவும் அவசியம். தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு இட்டுச் செல்வதாக உள்ளது.  நீட் தேர்வு நடைமுறை வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  பயனடையச் செய்யும் வகையில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம்; பிரதமருக்கு மம்தா பரபரப்பு கடிதம்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Mamata letter to Prime Minister for new criminal laws

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியச் சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் இப்போது வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை ‘பாரதிய நியாய சன்ஹிதா சட்டம்’ எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை ‘பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா’ எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை ‘பாரதிய சாக்சியா’ எனவும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். 

இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி மத்திய உள்துறை அமித்ஷா மீண்டும் தாக்கல் செய்தார். மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த 3 புதிய குற்றவியல் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ‘உங்களது அரசாங்கம் இந்த மூன்று முக்கியமான மசோதாக்களை ஒருதலைபட்சமாகவும், எந்த விவாதமும் இல்லாமலும் நிறைவேற்றியது. அன்று, கிட்டத்தட்ட 100 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இரு அவைகளின் மொத்தம் 146 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜனநாயகத்தின் அந்த இருண்ட நேரத்தில் எதேச்சதிகாரமான முறையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் தேதியை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த அணுகுமுறை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்மொழியப்பட்டதை முழுமையாக ஆராய வாய்ப்பளிக்கும். மேலும், குற்றவியல் சட்டங்களை மீண்டும் நாடாளுமனறத்தில் மறு ஆய்வு செய்ய உதவும். எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.