Skip to main content

“இதுபோன்ற கொடுமைகளில் பிரதமருக்கும் பங்கிருப்பது வேதனையளிக்கிறது” - ராகுல் காந்தி

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
 Rahul Gandhi says It is painful that the Prime Minister is also involved in such atrocities

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அளிப்பதாக கடந்த 22 ஆம் தேதி (22-12-23) மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்திருந்தார். மேலும் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும், சாக்‌ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் விதமாகத் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்திருந்தார்.

கடந்த 26.12.2023 இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மத்திய அரசு சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட அர்ஜுனா விருது மற்றும் கேல் ரத்னா விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி வினேஷ் போகத், தமது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளைத் திரும்ப அளிக்க பிரதமர் அலுவலகத்தை நோக்கி நேற்று சென்றார். ஆனால், அவர் வழியிலேயே காவல்துறையினரால் தடுக்கப்பட்டார். இதனால் அவர், தனது இரண்டு விருதுகளையும் தலைநகரின் கர்தவ்ய பாத் முக்கிய சாலையின் நடுவில் விட்டுச் சென்றார். பிறகு அதனை டெல்லி போலீஸார் எடுத்துச் சென்றனர். 

இந்த நிலையில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தனது விருதுகளை சாலை நடுவே வைத்திருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்த நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதை என்பதே முதன்மையானது. பதக்கங்களும், மற்ற பெருமைகளும் அதற்குப் பிறகுதான். இந்த துணிச்சலான வீராங்கனைகளின் கண்ணீரை விட உங்களது ‘பாகுபலி’யால் கிடைக்கும் அரசியல் பலன்கள் முக்கியமானதா? பிரதமர் தான் இந்தியாவின் காப்பாளர். இத்தகைய கொடுமையில் அவருக்கும் பங்கிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்