உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ரா கிராமத்தில், பழங்குடியின விவசாயிகள் மீது அரசு நடைதிய துப்பாக்கி சூட்டில் 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
தாங்கள் விவசாயம் செய்துவந்த நிலத்தை விட்டு அரசு தங்களை வெளியேற சொன்னதால், அதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை அடக்க துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த துப்பாக்கிசூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை காண செல்லும் அரசியல் தலைவர்கள் அனைவரும் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சோன்பத்ரா கிராமத்திற்கு சென்ற போது பாதி வழியில் நிறுத்தி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சாலையிலேயே அமர்ந்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரை அருகில் உள்ள சுனார் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று போலீசார் காவலில் வைத்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னரும் மக்களை சந்திக்காமல் திரும்ப செல்லப்போவதில்லை என்பதில் பிரியங்கா காந்தி உறுதியாக இருப்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.