இந்தியா மட்டுமல்ல உலகமே எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று (04.06.2024) வெளியானது. அதில், மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க வெறும் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகள் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே தேர்தலில் பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தில் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜநாத் சிங் ஆகியோர் நேரில் சந்தித்து அமைச்சரவையை கலைப்பதற்கான ராஜினாமா கடிதத்தையும் அதற்கான தீர்மானத்தையும் வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஜூன் 8 ஆம் தேதி மோடி பதவி ஏற்கும் வரை அவர் காபந்து பிரதமராக மோடி நீடிப்பார் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், 17வது மக்களவையை உடனடியாக கலைக்கக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையின் இந்த ஆலோசனையை ஏற்று 17வது மக்களவையைக் கலைக்கும் உத்தரவில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித்தொடர்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று (05.06.2024) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 17வது மக்களவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அதன்படி அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், அரசியலமைப்புச் சட்டத்தின் 85வது சரத்து உட்பிரிவு 2 மூலம் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி 17வது மக்களவையைக் கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.