Skip to main content

பெண்ணை வீட்டில் அடைத்து வன்புணர்வு செய்த பிரஜ்வல் ரேவண்ணா; குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி!

Published on 05/04/2025 | Edited on 05/04/2025

 

Police chargesheet! informed Prajwal Revanna locked the woman in house and hit her

கர்நாடக மாநிலம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, தனது வீட்டில் பணிபுரிந்த பெண்கள் உட்பட பல பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் அதிர்ச்சியை கிளப்பியது. கடந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட இருந்த நேரத்தில், அவர் பல பெண்களுடன் இருப்பது போன்ற 3, 000ஆபாச வீடியோக்கள் வெளியாகி இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாநில சிறப்புப் புலனாய்வுக் குழுவை கர்நாடகா காங்கிரஸ் அரசு அமைத்தது. ஒரு மாத காலமாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவை, கடந்தாண்டு மே மாதம் பெங்களூரு விமான நிலையத்திலேயே வைத்து போலீஸ் கைது செய்தது. பிரஜ்வல் ரேவண்ணா மீது பதியப்பட்ட வன்கொடுமை வழக்குகள் குறித்து சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்த நேரத்தில், கடந்தாண்டு செப்டம்பர் முதல் வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

1632 பக்கங்களைக் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் 113 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அதில் 45 வயது பெண் ஒருவர் விட்டுவிடும் படி கெஞ்சியும் கேட்காமல் வலுக்கட்டாயமாக பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பரபரப்பு தகவல் வெளியானது. 

இந்த நிலையில், போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணா குடும்பத்திற்குச் சொந்தமான பண்ணை வீட்டில் பணிபுரிந்து வந்த பாதிக்கப்பட்ட பெண்ணை, கொரானா பெருந்தொற்று காலத்தில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து வெளியே பேசினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடம் என்று பிரஜ்வல் ரேவண்ணா அந்த பெண்ணை மிரட்டியதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

10 மாதங்களுக்கு மேலாக நீதிமன்றக் காவலில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு குறித்து, வரும் ஏப்ரல் 9ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. 

சார்ந்த செய்திகள்