
மாமியாரின் தலை முடியைப் பிடித்து கொடூரமாகத் தாக்கி மருமகள் துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயது சர்ளா பத்ரா. இந்த பெண்ணுக்கு, விஷால் பத்ரா என்ற மகன் உள்ளார். விஷால் பத்ராவுக்கு, நீலிகா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த சூழ்நிலையில், மாமியார் சர்ளாவை வீட்டை விட்டு அனுப்பி முதியோர் இல்லத்துக்கு அனுப்புமாறு விஷாலை நீலிகா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால், தனது தாயாரின் உடல்நிலை காரணமாக தனது மனைவியின் கோரிக்கையை விஷால் மறுத்து வந்துள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று (04-04-25) தனது சகோதரனையும், தந்தையையும் தனது வீட்டிற்கு நீலிகா அழைத்துள்ளார். நீலிகாவின் தந்தையும், சகோதரனும் விஷாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த தாய் சர்ளாவின் தலை முடியைப் பிடித்து தரையில் தரதரவென இழுத்து நீலிகா பலமுறை அடித்துள்ளார். ஒரு கட்டத்தில், தலை முடியை பிடித்து மாமியார் சர்ளாவை வீசியுள்ளார். இதனால், அந்த இடமே களேபரமானது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து விஷாலும், அவரது தாய் சர்ளாவும் சேர்ந்து காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். காவல் நிலையத்தில் இருக்கும் போதே நீலிகாவின் தந்தையும், சகோதரனும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாக தெரிவித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நீலிகா மற்றும் அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய விஷால், ‘வீட்டின் உள்ளே இருக்கும்போது நான் தாக்கப்பட்டேன். சுமார் 10-15 பேர் வீட்டிற்குள் நுழைந்து என்னையும் எனது தாயாரையும் தாக்கினர். எனது தாயாரை வீட்டை விட்டு வெளியேற்றும்படி எனது மனைவி என்னை தொடர்ந்து துன்புறுத்தினார்’ என்று கூறினார். அதே போல் சர்ளா கூறுகையில், ‘கடந்த சில தினங்களாக என் மருமகள் என்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். மகனுக்கு கஷ்டத்தை கொடுக்கக் கூடாது என்பதற்காக இந்த விஷயத்தில் அமைதி காத்தேன். ஆனால், இப்போது நீலிகா மற்றும் அவரது குடும்பத்தினர் எங்களை தாக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் நீதி வேண்டும்’ என்று தெரிவித்தார்.