
பாஜகவின் 42-வது நிறுவன நாளான இன்றைய தினத்தை அந்தக் கட்சியின் தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கட்சித் தொண்டர்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "இந்த ஆண்டு நிறுவன தினம் 3 காரணங்களால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதலில், சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம்; இது உத்வேகத்திற்கான முக்கிய சந்தர்ப்பம். இரண்டாவது, வேகமாக மாறிவரும் உலகளாவிய நிலைமை; அதன் மூலம் இந்தியாவுக்கு தொடர்ந்து புதிய வாய்ப்புகள் வருகின்றன. மூன்றாவதாக, சமீபத்தில் 4 மாநிலங்களில் பாஜகவின் தலைமை மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 3 தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு கட்சி ராஜ்யசபாவில் 100 உறுப்பினர்களை எட்டியுள்ளது" எனப் பேசினார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, "சில கட்சிகள் பல தசாப்தங்களாக வாக்கு வங்கி அரசியல் மட்டுமே செய்தன. ஒரு சிலருக்கு மட்டும் வாக்குறுதிகளை அளித்து பெரும்பாலான மக்களை ஏங்க வைத்தன. பாரபட்சம் மற்றும் ஊழல் ஆகியவை வாக்கு வங்கி அரசியலின் பக்க விளைவு. பாஜக இதை கேள்வி கேட்டதோடு மட்டுமல்லாமல், அதன் தீமையை மக்களுக்கு புரிய வைப்பதிலும் வெற்றி பெற்றது" எனக் கூறினார்.
இக்கட்டான சூழ்நிலையிலும் இந்தியா 80 கோடி ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குவதை உலகம் கவனிக்கிறது எனக் கூறிய பிரதமர் மோடி, ஏழைகள் வெறும் வயிற்றில் தூங்காமல் இருக்க சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு செலவழிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.