Skip to main content

கருக்கலைப்பு சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றம்!

Published on 17/03/2021 | Edited on 17/03/2021

 

medical termination of preganancy law

 

பெண்களின் கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை மாநிலங்களவையில் நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. இந்தியாவில் பெண்கள் தங்களின் கருவைக் கலைப்பதற்கான சட்டம் அமலில் இருக்கிறது. அதன்படி, 20 வாரம் வரை வளர்ந்த கருவை பெண்கள் கலைத்துக்கொள்ள சட்டம் அனுமதி அளித்து வருகிறது.

 

அதேசமயம், பல்வேறு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் ஆகியோரின் நலன்களை முன்னிறுத்தி, பெண்களின் கருக் கலைப்பு காலத்தை 24 வாரங்களாக சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று சமூக நலன் சார்ந்த அமைப்புகளும், பெண்ணிய அமைப்புகளும் மத்திய அரசுக்கு நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்தபடி இருந்தன. மேலும், தாய் மற்றும் கருவில் உள்ள சிசுவுக்கு ஆபத்து இருந்தாலும் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டு வந்தன.

 

இது தொடர்பாக சில வருடங்களாகவே சுகாதாரத்துறை வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது மத்திய அரசு. இந்நிலையில், வல்லுநர்களின் பரிந்துரையின்படி, கருக் கலைப்பு காலத்தை நீட்டிக்க முடிவு செய்த மத்திய சுகாதார அமைச்சகம், கடந்த வருடம் இதற்கான சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தது. இதற்கான கேபினெட்டின் ஒப்புதலையும் பெற்று மக்களவையில் இந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  

 

இந்தச் சூழலில், நேற்று (16.03.2021) மாநிலங்களவையிலும் இந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதனை எதிர்த்த நிலையிலும் மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு. இதனை அடுத்து ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் சட்டத் திருத்தம் அமலுக்கு வரும். அதன்படி, 24 வாரகால கருவைக் கலைக்க பெண்களுக்கு அனுமதி கிடைக்கும். இதற்கிடையே இந்தச் சட்டத் திருத்தம் குறித்த எதிர்மறை விமர்சனங்களும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த அவலம்; மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Incident for pregnant woman at Hospital in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண். இவருக்கு, கடந்த 3ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால்,  கன்வாடியா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த கர்ப்பிணி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, அந்த பெண்ணுக்கு தீராத பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீதும், மருத்துவர்கள் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட குழுவை அமைத்து மாநில மருத்துவ கல்வி துணை செயலாளர் உத்தரவிட்டார். 

அந்த குழுவினர், சம்பந்தபட்ட மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். அவர்கள் அளித்த அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வாசலிலே குழந்தை பிறந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சமையலரின் மகளை அழைக்கும் அமெரிக்க பல்கலை. நெகிழ்ந்த தலைமை நீதிபதி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
The chef's daughter who won the Chief Justice's praise for studying law abroad

டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீனில் சமையல் செய்யும் ஊழியர் அஜய்குமார் சமல். இவரின் மகள் பிரக்யா (25). சட்டப்படிப்பு படித்த பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள இரண்டு முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்பு படிக்க உதவித்தொகை கிடைத்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள பிரபலமான கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் அவருக்கு கல்வி உதவித்தொகை வழங்க முன்வந்திருக்கிறது. அதனையொட்டி, சட்டமேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரக்யாவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திசூட் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் நேரில் வரவழைத்து பாராட்டினர். மேலும், பிரக்யாவுக்கும், அவரது குடும்பத்துக்கும், தலைமை நீதிபதி சந்திரசூட் சால்வை அணிவித்து கவுரவித்தார். 

இதனையடுத்து, அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தகங்களை பிரக்யாவுக்கு வழங்கினார். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “பிரக்யா தனது சொந்த உழைப்பால் இதனை சாதித்துள்ளார் என்பதை நாங்கள் அறிவோம். இருந்தாலும், அவருக்கு தேவைப்படும் அனைத்தையும் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். அவர் படிப்பை முடித்து மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் எதைச் செய்தாலும், சிறந்து விளங்குவார். மேலும், 1.4 பில்லியன் மக்களின் கனவுகளை மிக எளிதாகத் தன் தோளில் சுமந்து செல்வார்” என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய பிரக்யா, “எனது தந்தைக்கு  மகளாக இருப்பதற்கு நான் மிகவும் பாக்கியம் என்று நினைக்கிறேன். எனது பள்ளி நாட்களில் இருந்தே அவர் எனக்கு உதவியுள்ளார். மேலும் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை அவர் எப்போதும் பெறுவதை உறுதி செய்தார். நீதிமன்ற விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு மூலம், தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுவதை அனைவரும் பார்க்கலாம். அவர் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிப்பார். அவருடைய வார்த்தைகள் விலை மதிப்பற்றவை. அவர் தான் எனக்கு ரோல் மாடல்” என்று தெரிவித்தார்.