ajith about his wife shalini

மத்திய அரசு கடந்த ஜனவரியில் கலைத் துறை சார்பில் அஜித்குமாருக்கு இந்தாண்டுக்கான பத்ம பூஷன் விருது அறிவித்தது. இதையடுத்து விருது வழங்கும் விழா கடந்த 28ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நடந்த நிலையில் அதில் பங்கேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் அஜித் பத்ம பூஷன் விருது வாங்கினார். அவர் வாங்கும் போது அவரது மனைவி ஷாலினி, அவரது குழந்தைகள் மற்றும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா எழுந்து நின்று மனம் நெகிழ்ந்து கைதட்டி பாராட்டினர்.

Advertisment

இதையடுத்து விருது வாங்கிவிட்டு சென்னை திரும்பிய அஜித், விமான நிலையத்தில் எல்லோருக்கும் நன்றி என செய்தியாளர்களிடம் சொன்னார். மேலும் விரைவில் சந்திப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் அஜித் பத்ம பூஷன் விருது பெற்றது குறித்து ஆங்கில ஊடக ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது தனது மனைவி ஷாலினி குறித்து பேசிய அவர் எனது சாதனைகளுக்கு ஷாலினி தான் முழு பொறுப்பு எனக் கூறியுள்ளார்.

Advertisment

அவர் கூறியதாவது, “ஷாலினி எனக்காக நிறைய தியாகங்களைச் செய்திருக்கிறார். எனக்கு எப்போதும் தூனாக நின்று சப்போர்ட் செய்வார். எல்லோருக்கும் தெரியும் ஷாலினி அப்போது மிகவும் பிரபலமானவர் மற்றும் ரசிகர்களால் நேசிக்கப்பட்டவர். ஒரு சில நேரங்களில் என் முடிவுகள் தவறானதாக இருந்த போது எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார். கடினமான நேரங்களில் கூட எனக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார். நான் என் வாழ்க்கையில் சாதித்த அனைத்துக்கும் அவரின் பங்கு மிக அதிகம். எனக்கு கிடைக்கும் பாராட்டுக்களுக்கு அவர் தான் முழு பொறுப்பு ஏற்க தகுதியானவர்” என்றார்.

ஷாலினி 80 மற்றும் 90களில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ் மற்றும் மலையாள படங்களில் வலம் வந்தார். பின்பு கதாநாயகியாக 1997ஆம் ஆண்டு ‘அனியாதிப்ராவு’ என்ற மலையாள படம் மூலம் அறிமுகமானார். பின்பு அதே படத்தின் தமிழ் ரீமேக்கான ‘காதலுக்கு மரியாதை’ மூலம் தமிழுக்கு அறிமுகமானார். பின்பு பல்வேறு படங்களில் நடித்த அவர் அஜித்துக்கு ஜோடியாக ‘அமர்க்களம்’ படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து பின்பு இருவரும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு அவர் நடிப்பில் இருந்து விலகியிருக்கிறார்.

Advertisment