இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க முதல்வர் மம்தாவும், பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரு அணியில் திரட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக டெல்லிக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமும் அவர் மேற்கொண்டுள்ளார்.
நேற்று ஆனந்த் ஷர்மா, கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்த மம்தா, இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, இது ஒரு நல்ல சந்திப்பு எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "சோனியா ஜி என்னை தேநீர் சந்திப்புக்கு அழைத்தார். சந்திப்பில் ராகுல் ஜியும் உடனிருந்தார். நாங்கள் பொதுவான அரசியல் நிலைமை, பெகாசஸ் மற்றும் கோவிட் நிலைமை பற்றி விவாதித்தோம், மேலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்தும் விவாதித்தோம். இது ஒரு நல்ல சந்திப்பு. விரைவில் நேர்மறை முடிவு வரும் என நினைக்கிறேன்" எனக் கூறினார்.
எதிர்க்கட்சிகளை வழிநடத்துவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த மம்தா, "பாஜகவைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம். தனியாக நான் ஒன்றுமே இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் தலைவரல்ல. தொண்டர்" எனவும் தெரிவித்துள்ளார்.