அரசு அலுவலகங்களில் தாய் மொழியில் தான் உரையாட வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சித் தலைவர்களான தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மற்றும் சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு அலுவலகங்களில் மகாராஷ்டிராவின் தாய்மொழியான மராத்தி மொழியில் தான் உரையாட வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலம் முழுவது உள்ள அனைத்து அரசு மற்றும் அரை அரசு அலுவலகங்களில் கட்டாயமாக மராத்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களுடன் மட்டும் பொதுவான தொடர்பு மொழியை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுவது அதிகாரிகளின் ஒழுக்கக்கேடான செயலாகக் கருதப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் மராத்தி மொழியைப் பயன்படுத்துவதை வலுப்படுத்துவதையும், அரசு அலுவலகங்களில் மராத்தி பேசும் குடிமக்களுக்கு சிறந்த அணுகலை உறுதி செய்வதையும் நோக்கமாக இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.