/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ut-ni.jpg)
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழை காரணமாக பலஇடங்களில் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பருவமழை காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே மாநிலத்தில் 3 நாள்கள் வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருந்தது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் ரெட் எச்சரிக்கை மற்றும் 5 மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டியிருந்தது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (10-09-23) முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் 40 மிமீ மழை பதிவாகியுள்ளது. மொராதாபாத், சம்பல், கன்னோஜ், ராம்பூர், ஹத்ராஸ், பாரபங்கி உள்ளிட்ட பல இடங்களில் தீவிரமாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் மாநிலத்தின் மேற்கு பகுதியில் செப்டம்பர் 17 வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, அண்டை மாநிலமான உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை தொடர்பான சம்பவங்களில் சுமார் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. இதனால் பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நதி நீர் மட்டங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)