கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எம். சிவசங்கரை இடைநீக்கம் செய்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக, தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். அதன்பின் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் என்.ஐ.ஏ. கோரிக்கை வைத்திருந்த சூழலில், ஸ்வப்னா, சந்தீப் ஆகியோர் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் இருவரை சுங்கத்துறை நேற்று கைது செய்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அவர், சையத் ஆலி ஆகியோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பிலிருந்த, கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளரும், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளருமான சிவசங்கரை பதவியிலிருந்து நீக்கினார் பினராயி விஜயன். இதனையடுத்து இந்த வழக்குத் தொடர்பாக விசாரிக்க சிவசங்கருக்கு சுங்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரான சிவசங்கரிடம் 9 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய சாட்சியான தூதரக அதிகாரியை விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு வந்த நிலையில், அந்த அதிகாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் தனது சொந்த நாட்டுக்குத் தப்பி விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.