escalating struggle Rally in petrol stocks

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் என 3 குற்றவியல் சட்டங்கள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வரை அமலில் இருந்தன. இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, நாடாளுமன்றத்தில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் தாக்கல் செய்யப்பட்டன.

Advertisment

அதில், இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாக்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் கடந்த 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

Advertisment

அதே சமயம் பாரத நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிதாக கொண்டு வரப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தில் விபத்தால் மரணம் ஏற்பட்டால் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஹிட் அண்ட் ரன் (Hit and Run) வழக்கில் சிக்கும் ஒட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் ஒட்டுநர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை என இச்சட்டம் கூறுகிறது.

எனவே விபத்து தொடர்பான இந்த விதிமுறைக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து உத்திரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கார், பேருந்து, லாரி ஒட்டுநர்கள் முக்கிய சாலைகளை முடக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் குஜராத், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

Advertisment

அந்த வகையில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர்களும் ஈடுபட்டுள்ளனர். இதனால் வட மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல்கள் இருப்பு உள்ள பெட்ரோல் பங்குகளை தேடி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் டீசல் மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருள் விலை உயர வாய்ப்புள்ளது என்ற அச்சத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளில் குவிந்து வருகின்றனர்.

அதே சமயம் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஒட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று இரவு 7 மணியளவில் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.