
உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம் சராய் ரெஹ்மான் பகுதியில்வசிப்பவர் முகமது ரஹீஸ். இவர் அம்மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறிய ஜூஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர், தனது கடை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.400 அளவிற்கு சம்பாதித்து வருகிறார்.
இந்த நிலையில், இவருக்கு கடந்த 18ஆம் தேதி வருமான வரி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அதில், ரூ.7.79 கோடி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் மார்ச் 28ஆம் தேதிக்குள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முகமது ரஹீஸ், என்ன செய்வதன்று தெரியாமல் திகைத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகமது ரஹீஸ், “எதிர்பாராத இந்த நோட்டீஸ் என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. மேலும், எனக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அறிவிப்பால், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எனது தாயாருக்கு, மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வருமான வரி வழக்கறிஞரை அணுகியுள்ளேன். வருமான வரி அலுவலகத்திற்கு பதில் அளிப்பதற்கு முன்பு எனது வங்கிக் கணக்கின் பதிவுகளை சேகரிக்குமாறு எனது வழக்கறிஞர் கூறியுள்ளார். அதன்படி, நான் சேகரித்து வருகிறேன்” என்று வேதனையோடு தெரிவித்தார்.