உத்தரப் பிரதேசம் மாநில, ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோட்டலால் கெளதம். இவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கெளரி என்ற மனைவியும், சிருஷ்டி (14) மற்றும் விதி (6) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். கடந்த ஓராண்டாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கெளதம் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு கெளதமின் மருமகன் விகாஸ் தனது நண்பர்களுடன் கெளதம் வீட்டிற்கு வந்துள்ளார். இரவு 9 மணியளவில், அவர்கள் அனைவரும் ஒன்றாக உணவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் தூங்கச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் விகாஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கூரிய ஆயுதங்களைக் கொண்டு மொத்த குடும்பத்தை தாக்கினார். மேலும், கெளதமின் இரண்டு மகள்களின் கழுத்தையும் ஆயுதங்களைக் கொண்டு அறுத்து கொலை செய்தார். இந்த தாக்குதலில், கெளதம் மற்றும் அவரது மனைவி கெளரியும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, கெளரி தங்களுக்கு உதவி கோரி கூச்சலிட்டார். இதில் பயந்துபோன விகாஸ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கெளரியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், திரண்டு வந்து சம்பவ இடத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், காயமடைந்த தம்பதி இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்ப பகை காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தப்பிச் சென்றுள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.