மலையாள டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பிரபலமான உப்பும், மிளகும் என்ற மெகா தொடரில் நடித்து வருபவர் நிஷா சாரங். டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் படப்பிடிப்பில் பங்கேற்க தான் செல்லும்போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். தன் கையை பிடித்து இழுப்பது, உடலில் கிள்ளுவது போன்ற சேட்டைகளில் ஈடுபடுவார். பல முறை படுக்கைக்கும் அழைத்தார். நான் அவரை கண்டித்தேன்.
இது பற்றி டெலிவிஷன் நிறுவன அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் டைரக்டரை கண்டிக்காமல் என்னை சமரசம் செய்தனர். இதை வெளியில் சொன்னால் வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்று மிரட்டினர்.
இதனால் டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் சேட்டைகள் மேலும் அதிகமானது. ஒரு கட்டத்தில் என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே நான் இது பற்றி வெளியில் சொல்வேன் என்று கூறினேன். அதன் பிறகு என்னை தொடரில் இருந்து நீக்கி விட்டதாக டைரக்டர் தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனி இந்த தொடரில் நடிக்க மாட்டேன். டெலிவிஷன் நிர்வாகம் அழைத்தாலும், உண்ணிகிருஷ்ணன் டைரக்டராக இருந்தால் தொடரில் நடிக்க வரமாட்டேன் என்று கூறிவிட்டேன் என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே உன்னிகிருஷ்ணன் மீது கேரள பெண்கள் ஆணையம் வழக்கு பதிவு செய்து உள்ளது. சம்பந்தப்பட்ட இருவரின் வாக்குமூலத்தை பெற இருப்பதாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். டி.வி. தொடரில் இருந்து அவரை நீக்கிவிட்டு புதிய இயக்குனரை நியமிக்க டி.வி. நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த தொல்லை குறித்து நிஷா சாரங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது,
நீண்ட நாட்களாகவே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவரது நடவடிக்கை பிடிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. நான் மறுத்ததும் என்னை கேவலமாக திட்டினார். தனது ஆசை நிறைவேறவில்லையே என்ற ஆதங்கத்தில் போனிலும் மோசமாக ‘மெசேஜ்’ அனுப்பினார்.
தினமும் குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்து தொந்தரவு கொடுத்தார். அவர் தொல்லை தாங்காமல் பல முறை அழுது இருக்கிறேன். ஆனாலும் திருந்தவில்லை. என்னை கத்தார் மற்றும் அமெரிக்காவுக்கு அழைத்து இந்த தொடரில் நடித்ததற்காக கவுரவித்தனர். விருதுகளும் கொடுத்தார்கள். அது உன்னிகிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை. நடிப்பதன் மூலம் வரும் வருமானத்தில்தான் எனது குடும்பம் நடக்கிறது. என் மகளின் திருமணத்துக்காக அனைத்து அவமானங்களையும் பொறுத்துக்கொண்டேன் என கண்ணீர் விட்டார்.