ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம் சேர்ந்தவர் விஜய் ரேகர். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவருக்கு அருணா என்ற பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்தின் போது, மணமகள் இல்லத்திற்கு மணமகன் விஜய்யை குதிரையில் அழைத்து வர அருணாவின் தந்தை நாராயண் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், விஜய் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் குதிரையில் ஏறி வர அந்த கிராமத்தில் உள்ள மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அருணாவின் தந்தை நாராயணன், இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். மேலும், காவல்துறையை அணுகி குதிரை ஊர்வலத்துக்கு பாதுகாப்பு தரும்படி மனு அளித்தார்.
அதன்படி திருமணத்தையொட்டி, 200 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். 200 போலீஸுடன், குதிரையில் ஏறி விஜய் ஊர்வலமாக மணமகள் அருணா வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர், அவர்கள் இருவருக்கும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் திருமணம் நடைபெற்றது. இருப்பினும், திருமணத்தின் போது டிஜே மற்றும் பட்டாசு வெடிப்பதை அந்த இரு குடும்பமும் தவிர்த்தது.