Skip to main content

“சீட் தரவில்லை” - காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
 Congress former chief minister's action announcement in karnataka

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதே வேளையில்,  மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. 

இந்த நிலையில், தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்பமொய்லி அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து வீரப்பமொய்லி இன்று (08-04-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட நான் சீட் கேட்டிருந்தேன். ஆனால், கட்சி மேலிடம் இந்த போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு என்னிடம் கூறியது. 

கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்று நான் போட்டியில் இருந்து விலகிக் கொண்டேன். நான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எங்கள் கட்சி வேட்பாளர் ரஷா ராமையாவை ஆதரிக்கிறேன். அவரை ஆதரிக்குமாறு எனது ஆதரவாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை கர்நாடகா முதல்வராக வீரப்பமொய்லி பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்