
தலைநகர் டெல்லி, அசோக் விஹார் பகுதியில் லட்சுமிபாய் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியின் முதல்வராக பிரத்யுஷ் வத்சலா என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில், ஆராய்ச்சிக்காக வகுப்பறையின் சுவர்களில் மாட்டு சாணத்தை முதல்வர் வத்சலா பூசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தனது ஊழியர்களின் உதவியுடன் முதல்வர் வத்சலா வகுப்பறை சுவர்களில் மாட்டு சாணத்தைப் பூசி வருவது காட்சி அளிக்கிறது. அந்த வீடியோவை தனது கல்லூரி ஆசிரியர் குழுவில் பகிர்ந்து, ‘இங்கே வகுப்புகள் நடத்துபவர்கள் விரைவில் இந்த அறைகளை புதிய தோற்றத்தில் பெறுவார்கள். உங்கள் கற்பித்தல் அனுபவத்தை இனிமையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று முதல்வர் வத்சலா குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையானதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் வத்சலா, “இந்தச் செயல், கல்லூர் ஆசிரியர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வாரத்திற்குப் பிறகு, முழு ஆராய்ச்சியின் விவரங்களையும் பகிரப்படும். இயற்கை பொருட்களைத் தொடுவதில் எந்த தீங்கும் இல்லை என்பதால் அவற்றில் ஒன்றை எடுத்து நானே பூசினேன். சிலர் முழு விவரம் தெரியாமல் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.