Skip to main content

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம் -  தரையில் அமர்ந்து சத்தீஸ்கர் முதல்வர் தர்ணா!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

Chhattisgarh CM

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாவட்டத்தில் இணையச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இந்தச் சூழலில் வன்முறை நடைபெற்ற இடத்திற்குச் செல்ல அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வன்முறை நடைபெற்ற லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற சத்தீஸ்கர் முதல்வருக்கும், பஞ்சாப் துணை முதல்வருக்கும் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்க கூடாது என விமான நிலைய அதிகாரிகளை உத்தரப்பிரதேச அரசு அறிவுறுத்தியது. இதன்பின்னர் லக்கிம்பூருக்கு வர பஞ்சாப் முதல்வருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

 

இதற்கிடையே லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதும், தீபேந்திர ஹூடா, அஜய் குமார் லல்லு ஆகியோர் மீதும் பொது அமைதிக்கு ஊரு விளைவித்ததாக இன்று (05.10.2021) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற பஞ்சாப் துணை முதல்வரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல் வன்முறை நடந்த இடத்திற்கு செல்ல முயன்ற உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

இந்தநிலையில், ஏற்கனவே லக்கிம்பூருக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், இன்று லக்னோ விமான நிலையத்திற்கு வந்தார். அவரை விமான நிலையத்திலிருந்து வெளியேற உத்தரப்பிரதேச அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து பூபேஷ் பாகெல் விமான நிலையத்தில் அமர்ந்து தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தர்ணாவில் ஈடுபட்டுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சீதாபூரில் பிரியங்கா காந்தியை சந்திக்க லக்னோவிற்கு வந்ததாகவும், விமான நிலையத்திலிருந்து வெளியேற தான் அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்