Skip to main content

"வரலாற்றுப் பிழை நீக்கப்பட்டது!" - பாபர் மசூதி குறித்து பிரகாஷ் ஜவடேகர் சர்ச்சை கருத்து!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

prakash javadekar

 

அயோத்தி நிலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ராமர் கோயில் கட்டுவதற்காக நிதி அளித்தவர்களைப் பாராட்டும் விதமாக பாஜக, நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

 

அவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 1992 ஆம் ஆண்டு வரலாற்றுப் பிழை நீக்கப்பட்டது எனக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் “பாபர் போன்ற வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை அழிக்க அவர் ஏன் தேர்வு செய்தார்? ஏனென்றால், நாட்டின் உயிர் சக்தி அங்கு தங்கியிருப்பதை அவர் புரிந்துகொண்டார். ஒரு இரவுக்கு முன்பு நாங்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்தோம். (பாபர் மசூதியின்) மூன்று மாடங்கள் தெரிந்தன. அடுத்தநாள் ஒரு வரலாற்றுத் தவறு எப்படி நீக்கப்பட்டது என்பதை உலகம் கண்டது எனக் கூறியுள்ளார். 

 

மேலும் பிரகாஷ் ஜவடேகர், பாபர் மசூதி ஒரு மசூதி அல்ல, ஏனெனில் அங்கு எந்த வழிபாடும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். பிரகாஷ் ஜவடேகரின் கருத்து, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்ட பின்னர், மத்திய அமைச்சரே கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறுவதற்குக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

 

இந்தநிலையில், மத்திய அமைச்சரின் கருத்துக்கு ஒவைஸி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரகாஷ் ஜவடேகரின் பேச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "கோயில் இடிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், மசூதி இடித்தது சட்ட விதிமீறல் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மசூதியை இடிப்பதற்காக சதி செய்யவில்லை என்று சிபிஐ நீதிமன்றம் கூறுகிறது. இதை ஏன் பெருமையுடன் நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்ளவில்லை? வெட்கக்கேடானது" எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயில்வேயில் 5ஜி, 25,000 கோடி ரூபாய் செலவு - ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

prakash javadekar

 

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் சில முக்கியமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. சம்பா சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்வேயில் 5ஜி இணையச் சேவையைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "மேக்-இன் -இந்தியாவின் கீழ் 4 இந்திய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ரயில் விபத்தை தவிர்க்கும் தொழில்நுட்பத்தையும், நிகழ்நேர தகவல் தொடர்பு அடிப்படையிலான மோதல் தவிர்ப்பு முறையையும் இந்திய ரயில்களில் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றும்.

 

அதேபோல, ரயில்வே துறைக்கு 700 மெகா ஹெர்ட்ஸ் அளவுகொண்ட அலைவரிசையில், 5 மெகா ஹெர்ட்ஸ் 4ஜி அலைக்கற்றை ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் LTE அடிப்படையிலான விரைவான தகவல் தொடர்பு முறை ரயில்வே துறையில் கொண்டுவரப்படும். ரயில்வே தற்போது ஆப்டிகல் ஃபைபர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், ரயில்வே துறையில், அடுத்த 5 ஆண்டுகளில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த ரூ .25,000 கோடி செலவிட முடிவுசெய்யப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

 

 

Next Story

“குறைந்தது 15 முதல் 20 நாட்களுக்குள்ளாக ஆக்ஸிஜன் உற்பத்தியை இதில் துவங்க முடியும்..” - திருச்சி சிவா எம்.பி

Published on 26/04/2021 | Edited on 29/04/2021

 

Trichy Siva wrote letter to central minister prakash javadekar on Oxygen production


இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. அதேவேளையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணங்களும் நிகழ்ந்து வருகிறது. இதனை சரிசெய்ய ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தவும், புதிய ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்கவும் மத்திய மாநில அரசுகள் பல் வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. 

 

இந்நிலையில், திமுக எம்.பி. திருச்சி சிவா, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு இது குறித்து கடித்தம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவதிபடுகிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரத்தை உங்கள் பார்வைக்கு எடுத்துவருகிறேன். இதன் மீது உரிய பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும்.

 

எனது சொந்த ஊரான திருச்சியில் அமைந்துள்ள ‘பெல்’ நிறுவனத்தில், மூன்று ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒரு மணி நேரத்திற்கு 140 மெட்ரிக் கியூப் அளவு உற்பத்தி செய்யக்கூடியது. ஆனால், இவை கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து செயல்படாமல் உள்ளது.  ஆனால், தொழில்நுட்ப வல்லூநர்கள், நீர் குளிரூட்டி, கம்பரஸர் உள்ளிட்ட ஆறு தடைகளை பராமரித்து மீண்டும் செயல்பட வைக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். 

 

மேற்குறிப்பிட்டவையை சரிசெய்தால் குறைந்தது 15 முதல் 20 நாட்களக்குள்ளாக இதில் ஆக்ஸிஜன் உற்பத்தியை துவங்க முடியும். இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உயிர்களை காக்க முடியும். இதனை நீங்கள் உரிய முறையில் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.