நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 இல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு கூட்டத் தொடரில் 5 அமர்வுகள் நடைபெற உள்ளன. 'ஒரே நாடு ஒரு தேர்தல்' என்பதற்கான சட்டத் திருத்தங்களை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வருவார்கள் என்ற வியூகங்கள் கிளம்பியுள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நம் நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரின் முதல் அமர்வு பழைய நாடாளுமன்றத்தின் கட்டடத்தில் நடைபெறும் எனவும், விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 19 ஆம் தேதியில் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெறும் 4 அமர்வுகள் புதிய நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப தயாராகி வருகின்றனர். இதனையொட்டி இந்த கூட்டத்தின் போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.