தெலுங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரை, பா.ஜ.க எம்.பி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெட்சல் மாவட்டம், போச்சரம் பகுதியில் உள்ள மக்களுக்கு சொந்தமான நிலத்தை, ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், தெலுங்கானா மாநில பா.ஜ.க எம்.பி எடெலா ராஜேந்தரை, குடியிருப்பாளர்கள் அணுகி இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கூறியதாகக் கூறப்படுகிறது. அதன்படி, பிரச்சனையை தீர்க்க பா.ஜ.க எம்.பி ராஜேந்தர் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அவரது அழைப்பை ஏற்று அந்த தரகரும் தனது கூட்டாளிகளுடன் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, குடியிருப்பாளர்களை தரகர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பா.ஜ.க எம்.பி ராஜேந்தர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தீவிரமடைந்ததால், எம்.பி ராஜேந்தர் அந்த தரகரை அறைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து விளக்கம் அளித்த ராஜேந்தர், “காவல் நிலையத்தில் நூற்றுக்கணக்கான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எந்த நடவடிக்கையும் இல்லாததால், உள்ளூர் மக்கள் என்னை அணுகினர். எனவே, ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு கூடாரம் அமைக்கும்படி அவர்களிடம் கேட்டேன். நான் அதிகாரிகளுடன் இருப்பேன் என்று உறுதியளித்தேன். தரகர், உள்ளூர் மக்களை மிரட்டினார். கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, நான் அவரை அறைந்தேன். சட்டம் எங்கு தோல்வியுற்றாலும், நான் அங்கு இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.