உடற்பயிற்சி கூடத்தில் ஆண், பெண் என இருவரும் இருப்பது ‘ஹராம்’ என இஸ்லாமியர் அறிஞர் ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முசலியார், அகில இந்திய சுன்னத் ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர், வட கேரள மாவட்டங்களில் பிரபலமடைந்த வரும் மல்டி எக்ஸ்ர்சைஸ் காம்பினேஷன் (MEC-7) என்ற உடற்பயிற்சி நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
மலப்புரத்தில் நடைபெற்ற ஒரு மத விழாவில் பங்கேற்ற அபுபக்கர், “ஆண்களும் பெண்களும் கலப்பதற்கு விதிமுறைகளை இஸ்லாமிய விதிகள் வகுத்துள்ளன. புதிய உடற்பயிற்சி திட்டம் இந்த விதிமுறைகளை மீறுகிறது. இதுபோன்ற உடற்பயிற்சி திட்டங்கள் மூலம் பெண்கள் தங்கள் உடலை வெளிப்படுத்துகிறார்கள். இஸ்லாமிய நெறிமுறைகளை மீறுவது சமூகத்தில் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் பார்ப்பது ‘ஹராம்’ என்ற எண்ணத்தைக்கூட இந்த திட்டம் ஒழித்துவிட்டது.
அவர் இதுபோன்ற கவலைகளை எழுப்பும்போது, விமர்சகர்கள் காலாவதியானவர் என்று நிராகரிக்கிறார்கள். இதைச் சொல்லும்போது, கேள்வி என்னவென்றால்: இது நல்லதல்லவா? உடற்பயிற்சி நல்லதல்லவா? உலகத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லி அவர்கள் எங்களை திட்டுகிறார்கள்” என்று கூறினார். அபுபக்கரின் கருத்துகளுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
முன்னதாக, பாலின சமத்துவம் என்ற கருத்து இஸ்லாமியத்திற்கு எதிரானது என்று அபுபக்கர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பெண்கள் ஒருபோதும் ஆண்களுக்கு சமமாக இருக்க முடியாது என்றும், அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்க மட்டுமே தகுதியானவர்கள் என்றும் அபுபக்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.