
ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசை வரும் 2024ம் ஆண்டில் ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளும், சில தேசியக் கட்சிகளும் ஒரு கூட்டணியை அமைத்து அதன் செயல்பாடுகளை முன்னெடுத்துவருகின்றன. அதன்படி, பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். இதில் 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், கட்சிகளின் மூத்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய தேசிய முன்னேற்றத்திற்கான ஒருங்கிணைந்த கூட்டணி (INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE) என்பதன் சுருக்கமே (INDIA) இந்தியாவாகும்.

இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தின் முதலமைச்சரும், பா.ஜ.க. மூத்தத் தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா எதிர்க் கட்சிகளின் ‘இந்தியா’ எனும் பெயரை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது நாகரிக மோதல்கள் இந்தியாவையும் பாரதத்தையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு ‘இந்தியா’ என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நம் முன்னோர்கள் பாரதத்திற்காகப் போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காகப் பாடுபடுவோம்; பாரதத்திற்காக பா.ஜ.க.” எனப் பதிவிட்டுள்ளார்.
இஸ்லாமியர்களை அவதூறாகப் பேசிய முதலமைச்சர்; எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
இவர் சில நாட்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை ஏற்றம் குறித்து பேசும் போது, காய்கறி விற்கும் மியாக்கள், (வங்க மொழி பேசும் முஸ்லிம் வியாபாரிகள்) தான் அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.