
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில், ஜம்மு - காஷ்மீர் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. மேலும், இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் என 16 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், பாகிஸ்தான் ஒட்டிய எல்லை மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கிருக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து கடந்த 3 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் முயற்சிகளுக்கு இந்தியா பதிலளித்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே பதில் தாக்குதல் சம்பவங்களால் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி’ எனப் பதிவிட்டார்.
இதனையடுத்து பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தை ஒப்புகொள்வதாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘உடனடி அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தானும் இந்தியாவும் ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO), இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை அழைத்து பேசினார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், மே 10 ஆம் தேதி மாலை 5 மணி முதல் நிலம், கடல் மற்றும் வான்வழி அனைத்து விரோதங்களையும் நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். மே 12 ஆம் தேதி இரு நாட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.