பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளில் பெண்களின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஐநாவில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் 550 வல்லுநர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பு, பாரம்பரிய நடைமுறைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அதற்கான இறுதி அறிக்கை ஒன்று சமர்பித்துள்ளது.
அதில் இந்தியா தான் உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. பாலியல் வன்கொடுமை, பெண் அடிமைத்தனம் என இந்தியாவில் பெண்கள் பலவகையில் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்கள் நடத்தப்படும் விதம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. போர் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளது. இந்தப்பட்டியலில் மேற்கத்திய நாடான அமெரிக்கா 10வது இடத்தில் உள்ளது.
2011-ம் ஆண்டு இதேபோன்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி முதலிடத்தில் ஆப்கானிஸ்தானும், இரண்டாவது காங்கோவும், மூன்றாவது பாகிஸ்தானும் இடம்பிடித்திருந்தது. அப்போது நான்காவதாக இடம்பிடித்துள்ள இந்தியா தற்போது முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட செய்தி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பெண்களை துன்புறுத்துதல் மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவை அதிக அளவில் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் நிபுணர்கள் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பொருளாதாரத்திலும், விண்வெளி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் வளர்ந்து வரும் இந்தியாவில் தான் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், 2007 முதல் 2016 வரையிலான இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 83 சதவீதம் அதிகரித்ததாகவும், ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் நான்கு பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.