அதிமுகவின் படுதோல்வி சசிகலாவை உற்சாகமடைய வைத்திருக்கிறது. எடப்பாடி-பன்னீர் தலைமைக்கான தோல்வியாக தேர்தல் முடிவுகள் கணிக்கப்படுவதால் கட்சி தலைமை தன்னைத் தேடி வரும் என்கிற நம்பிக்கையில் பல்வேறு திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார் சசிகலா. முதல்கட்டமாக, அதிருப்தியாளர்களை தன்பக்கம் இழுக்கும் வலையை மாவட்டம் தோறும் விரித்துள்ள சசிகலா, அதற்கான அசைன்மெண்ட்டை தனது ஆதரவாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். தென்சென்னை மாவட்ட அதிமுக முன்னாள் துணைச்செயலாளர் வைத்தியநாதனிடம் விழுப்புரம் மாவட்டம் கொடுக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தின் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களான மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும் முன்னாள் நகரச் செயலாளருமான திண்டிவனம் கே.சேகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முகமது ஷ்ரிஃப், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் குப்புசாமி, தலைமைக் கழக பேச்சாளர் தம்பி ஏழுமலை, நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் மஸ்தான், மாவட்ட பிரதிநிதி ஸ்ரீதர் சங்கர் உள்ளிட்ட பலரையும் சசிகலா பக்கம் கொண்டு வந்திருக்கிறார் வைத்தியநாதன்.
ஜெயலலிதா பிறந்தநாளின்போது மேற்கண்ட விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சசிகலாவின் ஆசியுடன் போஸ்டர் அடித்து ஒட்டி மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறார்கள். அதனை முடித்துவிட்டு சென்னையில் சசிகலாவை சந்தித்த அவர்கள், கட்சிக்கு தலைமையேற்கும் முயற்சியை நீங்கள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தனது செயல்வீரர்கள் சசிகலா பக்கம் சென்றதில் அதிர்ந்து போயிருக்கிறார் சி.வி. சண்முகம்.
இப்படி மாவட்டம் தோறும் அதிருப்தியாளர்களை வளைக்கும் ரகசிய பிரயோகத்தை சசிகலா ஆதரவாளர்கள் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், மாஜி அமைச்சர்கள் பலரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்களோ, சில நிபந்தனைகளை முன்னிறுத்தி, இதையெல்லாம் சசிகலா செய்வாரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் விசாரித்த போது, "தேர்தல் தோல்விகளால், கட்சிக்கு இரட்டைத் தலைமை சரியா? என்கிற கேள்விகள் எங்களுக்குள் எழுப்பியிருக்கிறது. இரட்டைத் தலைமையை மக்கள் பலகீனமாகப் பார்க்கிறார்கள் என்பது எங்களுக்கு எப்போதே தெரியும். அந்த பலகீனத்தை இப்போது தொண்டர்களும் அடிமட்ட நிர்வாகிகளும் உணருகிறார்கள். ஆட்சியில் இருந்தவரை இந்த பலகீனம் மறைக்கப்பட்டிருந்தது. இப்போது தொண்டர்களிடமும் வெளிப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இடையே விரிசல்களையும் அதிகப்படுத்தியிருக்கிறது தேர்தல் தோல்வி. ஏற்கனவே பல விசயங்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.சை கலந்தாலோசிக்காமலே பல முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்த எடப்பாடி, தேர்தல் தோல்விக்கு பிறகும், ஓ.பி.எஸ்.சை புறக்கணிப்பதில் தீவிரம் காட்டுகிறார். சிறையில் இருக்கும் ஜெயக்குமாரை சந்திக்கச் சென்ற விவகாரத்தில் இருவருக்குமான இந்த மோதல் வெளிப்படையாகவே அம்பலமானது. அதனால், எடப்பாடியின் முடிவுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கக் கூடாதுங்கிற முடிவில் இருக்கிறார் ஓ.பி.எஸ். அதேபோல, ஓ.பி.எஸ். சொல்லும் யோசனைகளை ஏற்கும் மனநிலையில் எடப்பாடியும் இல்லை. இப்படி இருவரும் இரு துருவங்களாக செயல்பட்டால் கட்சி மேலும் பலகீனமாகும் என சீனியர்களும் தொண்டர்களும் கவலைப்படுகிறார்கள்.
அதனால், இரட்டைத் தலைமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது அதிமுக. காரணம், மாஜிக்கள், மா.செ.க்கள் அனைவரும் குறுநில மன்னர்களாகத்தான் இருக்கிறார்கள். இரட்டை தலைமையை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை. அதனால் ஒற்றைத் தலைமை பேச்சு இப்போது உருவாகத் துவங்கியிருக்கிறது. ஒற்றைத் தலைமைக்குள் கட்சியை கொண்டு வர வேண்டுமானால் கட்சியின் சட்ட விதிகளை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும். அப்படி மாற்றியமைத்தால் ஒற்றைத் தலைமைக்கு கட்சிக்குள் ஏகப்பட்ட போட்டிகள் இருக்கும். குறிப்பாக, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தவிர, அதிமுக சீனியர்கள் பலரும் கட்சி தலைமைக்கு வரத்துடிக்கின்றனர். இதனால் போட்டிகள் உருவாகும்; அது மோதலாக கூட வெடிக்கலாம். அதனால் ஒற்றைத் தலைமையை கட்சியில் உருவாக்குவது ஈசியான விஷயமில்லை.
இந்த சூழலில்தான், சசிகலா தரப்பினர், மாஜிக்களிடமும் மா.செ.க்களிடமும் சசிகலாவை ஆதரியுங்கள் என பல்ஸ் பார்க்கின்றனர். ஆனால், நாங்களோ, 'சசிகலாவை ஏற்பதில் யாருக்கும் எந்தவித தயக்கமும் கிடையாது. ஆனால், சசிகலாவை தவிர, தினகரன் உள்ளிட்ட சசிகலா சொந்தங்கள் யாரையும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள முடியாது. ஏன்னா, சசிகலா உறவுகளின் வீட்டில் மீண்டும் கைக்கட்டி, வாய்ப்பொத்தி காத்துக்கிடக்க சீனியர்கள் யாரும் தயாராக இல்லை. அதனால், என்னைத் தவிர என் சொந்தங்கள் யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள் என ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா சத்தியம் செய்ய வேண்டும். அவருக்கு எதிராக சில வழக்குகள் இருக்கிறது. அதையும் அவர் சரிசெய்து கொள்ள வேண்டும். இதெல்லாம் நடந்தால், சசிகலாவை ஏற்பது குறித்து சீனியர்கள் விவாதிப்பார்கள் என்பதை எங்களிடம் பேசும் சசிகலா ஆதரவாளர்களிடம் தெளிவுப்படுத்தியிருக்கிறோம். அந்த சத்தியத்தை சசிகலா செய்வாரா?" என்று புதிய முழக்கத்தை முன்வைத்து நம்மிடம் விவரிக்கிறார்கள் அதிமுக மாஜிக்கள்.
மாஜிக்களிடம் மெல்ல மெல்ல சசி தரப்பு இப்படி ஊடுறுவதால்தான், ஜெயலலிதாவின் பிறந்தநாளில் பேசிய மாஜி அமைச்சர் செல்லூர்ராஜு, "அதிமுகவில் தலைமையே இல்லை; இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்துவதற்காக உருவாக்கி வைத்திருக்கிறோம்" என சமீபத்தில் சொல்லியிருப்பதை கவனிக்க வேண்டும். அதேபோல, ஜெயக்குமாரை கண்டித்து அதிமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "இரட்டைத் தலைமைக்கு கட்டுப்பட்டு தொண்டர்கள் பணி செய்து வருகின்றனர். எந்த குழப்பமுமில்லை. கட்சித் தலைமை முடிவெடுத்தால் ஒற்றைத் தலைமையை தொண்டர்கள் ஏற்பார்கள்" என்றிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர்களிடமிருந்து இப்படிப்பட்ட கருத்துக்கள் வெளிப்படுவதைத் தொடர்ந்து கட்சிக்குள் இது விவாதப் பொருளாகி வருகிறது. செல்லூர் ராஜுவை தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிச்சாமி கடிந்து கொள்ள, நான் அப்படி சொல்லவில்லை. நான் சொன்னதை திரித்து வெளியாகியிருக்கிறது என்று சொல்லி சமாளித்திருக்கிறார் செல்லூர் ராஜு.
ஆக, சசிகலா ஆதரவாளர்கள் அதிமுகவில் வலையை வீசியிருக்கும் நிலையில் எடப்பாடிக்கு எதிரான மனநிலை அதிமுகவில் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தன்னிடம் பேசும் சீனியர்களிடம், திமுக ஆட்சியில் நானும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தேன். என்னைப் பார்க்க சிறைக்கு எடப்பாடியும் வரலை, பன்னீரும் வரலை. எனது கைதை கண்டித்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தலை. ஆனா, ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதும் எல்லாம் நடக்கிறது. அப்படின்னா, நான் ஏமாளியா? இதுல கொடுமை என்னென்னா.. ஜெயக்குமாருக்காக கண்டன ஆர்ப்பாட்டத்தை என்னையே நடத்தச் சொன்னாங்கப்பா! என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.
எடப்பாடி, பன்னீர் மீது கோபத்திலிருக்கும் ராஜேந்திரபாலாஜி, அவர் அமைச்சராக இருந்தபோது அவருக்கு எல்லா வகையிலும் வலது கரமாக இருந்த உதவியாளரான ஒன்றிய செயலாளர் பலராமன் (ஆவின் ஊழலில் சிக்கியவர்), தனி உதவியாளர் சீனிவாசன், நகரச் செயலாளர் சக்திவேல், சிவகாசி நகராட்சியில் அதிமுகவில் வெற்றிப்பெற்ற சீனிவாசன் மனைவி உள்பட 11 கவுன்சிலர்களில் 9 கவுன்சிலர்கள் என பலரையும் திமுகவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசுவை சந்தித்து திமுகவில் அவர்கள் இணைந்துள்ளனர். ராஜேந்திர பாலாஜியும் திமுகவுக்கு தாவுவதாக இருந்தது. இதை எப்படியோ அறிந்த சசிகலா, ராஜேந்திரபாலாஜியை தடுத்து நிறுத்திவிட்டார்.
இப்படி அதிமுகவில் வெற்றிப்பெற்றவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என பலரும் திமுகவுக்கு தாவுவதையும், சசிகலா தரப்பு கட்சியினரை இழுக்க முயற்சிப்பதையும் தடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலாவுக்கு ஆதரவாக எழும் குரல் குறித்து கட்சியின் சீனியர்களிடம் அவசர ஆலோசனையையும் நடத்தி முடித்துள்ளார் எடப்பாடி.
ஆக, எடப்பாடி தலைமைக்கு எதிராக மாஜி அமைச்சர்கள், சீனியர்கள், நிர்வாகிகள் என மறைமுக யுத்தம் அதிமுகவில் நடந்து வரும் நிலையில், எதிரிகளை வீழ்த்தும் யாகம் ஒன்றை திருச்செந்தூரில் நடத்த இன்று பயணப்பட்டுள்ளார் சசிகலா! திருச்செந்தூரில் இன்று தங்குகிற அவர், நாளை திருச்செந்தூரில் இருந்து கார் பயணமாக மதுரை வந்து அங்கிருந்து சென்னைக்கு திரும்புகிறார். இந்த பயணத்தின் பல்வேறு இடங்களில் அவரை வரவேற்கும் ஏற்பாடுகளை செய்துள்ளனர் அதிமுகவினர்.