பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது இந்தாண்டு, ‘400 தொகுதிகளில் வெற்றுபெருவோம், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்..’ என்று மார்தட்டிக்கொண்டது பா.ஜ.க. மறுபக்கம் முற்றிலும் முரண்பாட்டோடும், கருத்து வேறுபாட்டோடும் பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டியது காங்கிரஸ். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் நாடு முழுவதும் தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டது. இதனால் நடந்த அதிரடிகளும், தேர்தலுக்கு பிறகான ஏமாற்றங்களும், அதனால் நடந்த மாற்றங்களும் இந்திய ஒன்றியத்தை மக்கள் தங்களது ஜனநாயக கரங்களுடன் வலுப்படுத்தியதை உலகமே சற்று உற்றுப்பார்த்தது.
‘அரசியலில் நாம் தலையிடவில்லை என்றால், அரசியல் நம் வாழ்கையில் தலையிடும்..’ என்ற சினிமா வசனத்தை போன்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது அரசியல். அப்படி இந்தாண்டு இந்தியாவில் நடந்த சில முக்கியமான அரசியல் நிகழ்வுகளை ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்த்துவிடுவோம்....
ராமர் கோவில் திறப்பு;
உச்சநீதி மன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட கிரானைட் கற்களையும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இளஞ்சிவப்பு மணலையும் கொண்டு கோவிலின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு துளி இரும்புக் கூட பயன்படுத்தப்படாமல் உருக்கு மூலம் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமானத்தில் துளி அளவு கூட இரும்பு பயன்படுத்தப்படவில்லை. பொதுவாக இரும்பின் ஆயுட்காலம் 90 ஆண்டுகள் மட்டுமே; ஆனால் ராமர் கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் எந்த வித இயற்கை பேரிடர்களிலும் பாதிக்கக் கூடாது என்பதற்காக உருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
3 தளங்கள், 161 அடி உயர கோபுரத்துடன் கட்ட திட்டமிடப்பட்ட ராமர் கோவிலின் பணிகள் முடிக்கப்படாமலேயே ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா பிரம்மாண்டமாக நடந்தது. பால ராமர் பிரதிஷ்டையைத் தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். முழுவதுமாக கட்டி முடிக்கப்படாமலே தேர்தலுக்காக அவசரம் அவசரமாக கோவிலை திறக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது. சொன்னபடியே, பா.ஜ.க. ராமர் கோவிலை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் ராமர் கோவிலை புல்டோசர் கொண்டு இடித்து விடுவார்கள் என்று உச்சக்கட்ட வெறுப்பை விதைத்தார் மோடி. ஆனால், ராமர் கோவில் அமைந்திருக்கும் அமோதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரையே வெற்றிபெற செய்தனர் மக்கள்.
தேர்தலுக்கு முன்பு வரை ‘ராமர்... ராமர்...’ என்று பேசிக் கொண்டிருந்த பா.ஜ.க. தலைவர்கள், தேர்தலுக்கு பிறகு ஒடிசாவின் புரி ஜெகநாத் பெயரை கூற ஆரம்பித்தது நினைவுகூரத்தக்கது.
ஹேமந்த் சோரன்
ஜார்கண்ட் பழங்குடியின தலைவர் ஷிபு சோரனின் மகனான ஹேமந்த் சோரன் அண்ணன் துர்கா சோரன் மறைவால் 2009 ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்தார். ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் தலைவராக உயர்ந்த ஹேமன் சோரன் அரசியலுக்கு வந்த நான்கே ஆண்டுகளில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஹேமந்த் சோரன் ஒருவருடம் மட்டுமே முதல்வராக இருந்தார். அடுத்துவந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஜார்கண்ட் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழலில்தான், சட்டவிரோத பணப்பரிமாற்றம், நில மோசடி தொடர்பு வழக்குகளில் அமலாக்கத்துறை முதலமைச்சர் ஹேமன் சோரனுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், தொடர்ந்து சம்மனுக்கு ஆஜராகாத காரணத்தால் ஜனவரி மாதம் அமலாக்கத்துறை ஹேமன் சோரனை வீட்டிலேயே வைத்து விசாரணை நடத்தியது. அடுத்த கட்ட விசாரணைகள் விரிவடைய, ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் பணம், சொகுசு கார், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்ட் மாநிலமே பதற்றத்தில் இருக்க, ஆளுநர் மாளிகை, ஹேமந்த் சோரன் வீடு, அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவ படையினர், போலீஸார் குவிக்கப்பட்டனர்.
எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படுவதை உணர்ந்த ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கைதுக்காக காத்திருந்தார். பிப்ரவரி 1 ஆம் தேதி கைதும் செய்யப்பட்டார். மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நெருங்கிய ஆதரவாளரும், அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பய் சோரன் பதவியேற்றுக் கொண்டார். 6 மாதம் சிறைவாசத்திற்கு பிறகு ஜூன் மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்த ஹேமந்த் சோரன், மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இதனால் அதிருப்தி அடைந்த சம்பாய் சோரன் பா.ஜ.க. பக்கம் சென்றார். ஹேமந்த் சோரன் சிறையில் இருந்த காலத்தில் அவரது மனைவி கல்பனா சோரன் ஜே.எம்.எம் கட்சியின் முகமாக மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார். இந்த சூழலில் நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், பா.ஜ.க. தலைவர்கள் ஜார்கண்ட் மாநிலத்திலேயே முகாமிட்டிருந்தனர். பிரதமர் முதல் பாஜக எம்.எல்.ஏ.வை ஹேமன் சோரனுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். அதில் பா.ஜ.க.வினர் உச்சபட்ச இனவெறுப்பு பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர். ஆனால், அனைத்தையும் புறக்கணித்த மக்கள் மீண்டும் ஜே.எம்.எம். கட்சிக்கே வாய்ப்பளித்து ஹேமன் சோரனை முதல்வராக்கினர்.
பா.ஜ.க.விற்கு செக் வைத்த மக்கள்;
பாரம்பரியமான காங்கிரஸ் கட்சி, பத்து வருடங்களாக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் படுதோல்வியை சந்தித்தது. அதே சமயம் 10 வருடங்கள் எதிர்க்கட்சியே இல்லாமல் அசுர பலத்துடன் ஆட்சியில் இருந்தது பா.ஜ.க.. வாழ்வா சாவா போராட்டத்துடன் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பெரும் பலத்தோடு நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது. இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு பா.ஜ.க. பல்வேறு உத்திகளை கையாண்டது. பிரதமரே நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தீவிர பரப்புரை மேற்கொண்டார். செல்லும் இடமெல்லாம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை மோசமாக விமர்சனம் செய்தார். 547 நாடாளுமன்றத் தொகுதிகளில் 400 தொகுதிக்கும் மேல் வென்று தனிப்பெரும்பான்மையை மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அடித்துக் கூறினார்கள். வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது.
உலகமே உற்றுநோக்கிய உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றப்போவது யார் என்று பங்காளி நாடு முதல் பகையாளி நாடுகள் வரை எதிர் பார்த்து காத்துக்கொண்டிருந்தது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றது. 291 இடங்களில் பா.ஜ.க. மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறவில்லை.
எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 99 இடங்களிலும், சமாஜ்வாதி 39 இடங்களிலும், திரிணமுல் 29 இடங்களிலும், தி.மு.க. 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த மக்களவைத் தேர்தலை ஒப்பிடுகையில் பா.ஜ.க. மட்டும் 303 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், தற்பொழுது இந்த தேர்தலில் 239 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல கடந்த தேர்தலை விட காங்கிரஸ் இரட்டிப்பான வெற்றி பெற்றது.
இறுதியாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி-க்களின் துணையோடு மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சி அமைத்தது. அதே சமயம் வலுவான எதிர்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வானார். பா.ஜ.க.வின் 400 தொகுதி இலக்கை மக்கள் தங்களது ஜனநாயக கடமையின் மூலம் தகர்த்து எறிந்தனர். 10 ஆண்டுகால மோடியின் ஆட்சிக்கு கடிவாளம் போடும்படியாக தனிப்பெரும்பான்மையை கொடுக்காமல் கூட்டணியுடன் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்கும் நிலைக்கு மக்கள் கொண்டு வந்தனர்.
ஜாமீனில் வந்து சம்பவம் செய்த சந்திரபாபு;
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்தியாவின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை வீழ்த்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடனும், பா.ஜ.க.வுடனும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற, சட்ட மன்ற தேர்தலை சந்தித்தது.
இறுதியாக தெலுங்கு தேசம் கட்சி 127 தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும்,பா.ஜ.க. 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேசமயம் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெறும் 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆந்திர மாநில சட்டசபை பெரும்பான்மைக்கு 88 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் தனிப்பெரும்பான்மையும் தாண்டி தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்றது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வெற்றிபெற்று அசுர பலத்துடன் ஆட்சி அமைத்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ். இந்த தேர்தலில் படுதோல்வியைக் சந்தித்தது.
முதலமைச்சராக இருந்தபோது சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுக் கழகத்தில் முறைகேடு செய்ததாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஜெகன் மோகன் அரசு. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சந்திரபாபு மீது ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியது. 50 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்த சந்திரபாபு நாயுடு மக்களின் அனுதாபத்தை வாக்காக அறுவடை செய்தார். சந்திரபாபு நாயுடு சிறைக்கு செல்ல காரணமாக வழக்கை விசாரித்துவந்த ஐ.பி.எஸ் அதிகாரி என்.சஞ்சை முறைகேடு புகாரில் சிக்கியதாக கூறி அவரை அண்மையில் சஸ்பெண்ட் செய்தது தெலுங்கு தேசம் அரசு.
பதவியை துறந்த அரவிந்த் கெஜ்ரிவால்;
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் கைது செய்யபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஹேமன் சோரனை போன்று அரவிந்த் கெஜ்ரிவாலையும் சிறையில் அடைத்து எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்களை அச்சுறுத்த நினைப்பதாக பா.ஜ.க.வினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கல்பனா சோரன் போன்றே அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவுகளை வெளியே இருந்து அமல்படுத்தி வந்தார் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால்.
50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மே மாதம் 10ஆம் தேதி இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார். ஜூன் 2 ஆம் தேதி வரை மட்டுமே ஜாமீன் என்பதால், இடைப்பட்ட காலத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக படுதீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். இருப்பினும் அது இந்தியா கூட்டணிக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் பிணை முடிந்து மீண்டும் சிறைக்கே சென்றார். ஏறக்குறைய ஐந்து மாதங்கள் சிறைக்குள் இருந்து அரசை நடத்தி வந்த அரவிந்த் கெஜ்ரிவால் செப்டம்பர் 13 ஆம் தேதி ஜாமீன் கிடைத்து வெளியே வந்த இரண்டே நாளில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
“மக்கள் மத்தியில் செல்வேன். ஒவ்வொரு தெருவாக... வீடுவீடாக செல்வேன்... கெஜ்ரிவால் நேர்மையானவன் என்று பொதுமக்கள் தீர்ப்பு வழங்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன்” என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவராக வலம் வந்த அதிஷி மர்லினாவை முதல்வராக அறிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை;
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5 ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவர் அவரின் சொந்த பகுதியிலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறியது. தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்த கேள்வி இந்திய அளவில் விவாதமானது. உள்ளூர் தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை பலரும் சட்ட ஒழுங்கை பற்றி கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இதுதொடர்பாக 20க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வி.கே.பாண்டியன் எனும் தமிழர்;
நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலும் நடந்த நிலையில் 24 ஆண்டுகளாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்த நவீன் பட்நாயக் பெரும் தோல்வியை சந்தித்தார். இதற்கு தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன் தான் காரணம் என்று பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்தனர்.
ஒடிசா கேடரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன், அம்மாநிலத்தின் முக்கிய அரசு பதவிகளை வகித்து திறம்பட செயல்பட்டார். பின்பு அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக இருந்த வி.கே.பாண்டியன் காலப்போக்கில் அவரது நம்பிக்கைக்குரிய நபராக மாறிப்போனார். ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியாக இருந்த பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் வி.கே பாண்டியன் மிகுந்த செல்வாக்கு உள்ள நபராக பார்க்கப்பட்டார்.
ஐ.ஏ.எஸ். பணியை ராஜினாமா செய்துவிட்டு பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்த வி.கே.பாண்டியன் தேர்தலின் போது, வேட்பாளர்களைத் தேர்வு செய்வது மட்டுமின்றி, கட்சி சார்பில் பிரச்சாரம் செய்யும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். கட்சியிலும் ஆட்சியிலும் வி.கே.பாண்டியனின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை. இது அம்மாநில மக்களிடையே ஒரு விதமான அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனை கவணித்த பா.ஜ.க., வி.கே.பாண்டியனை குறிவைத்து தேர்தல் பிரச்சாரதை மேற்கொண்டது. சுமார் 4.5 கோடி ஒடிசா மக்களை ஒரு தமிழர் ஆள வேண்டுமா? என்று பா.ஜ.க. தலைவர்கள் தொடர் பிரச்சாரம் செய்தனர். அதோடு, பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி தமிழ்நாட்டுக்கு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்? என்று பிரதமர் மோடி பிரச்சார கூட்டத்தில் பேசினார். அதன் விளைவாக பிஜு ஜனதா தளம் தோல்வியை தழுவ, பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஒடிசாவில் தோல்வியை தழுவியது. இதற்கு வி.கே.பாண்டியன் தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. இந்த தோல்விக்கு நான் தான் காரணமென்றால் அதற்காக வருந்திருகிறேன் என்ற வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.
லட்டு;
ஆந்திராவில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. உலகம் முழுவதில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அப்படியான சூழலில், லட்டு விவகாரம் அரசியலில் பெரிய பேசுபொருளாக மாற, முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு தாக்கப்பட்டது.
ஏழுமலையானுக்கு களங்கம் வந்து விட்டதாகக் கூறி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் பிராயச்சித்த விரதத்தை மேற்கொண்டார். விரதத்தை முடித்து அலிபிரி பாதையில் நடந்தே திருமலைக்கு சென்றவர், இரவு திருமலையில் தங்கி மகள்களுடன் ஏழுமலையானைத் தரிசனம் செய்தார். அதன்பின் செல்லும் இடமெல்லாம் லட்டு, சனாதனம் குறித்து பேசிய பவன் கல்யாண், ஒரு கட்டத்தில் சனாதனத்தை யாரும் அழிக்க முடியாது; அதை பற்றி பேசினால் நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள் என்ற ரீதியில் ஆக்ரோசமாக பேசினார்.
இது ஒரு புறமிருக்க, ‘அரசியல் சாசனத்தை கையில் வைத்திருக்கும் ஒரு முதல்வர், எடுத்த உடனே எதற்காக இதனை பொதுவெளிக்குக் கொண்டு சென்றார்? மறுபுறம் உச்சநீதி மன்றம் சந்திரபாபு நாயுடுவை கேள்விகளால் துளைத்து எடுத்தது. இறுதியாக இந்த விவகாரத்தை விசாரிக்க மாநில அதிகாரிகள் அடங்கிய புதிய சிறப்பு விசாரணை குழு ஒன்றை உச்சநீதி மன்றம் அமைத்ததை தொடர்ந்து, லட்டு விவகாரம் சற்று அமைதியானது.
அதானியை அலறவிட்ட ஹிண்டன்பர்க்;
அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும். அந்த வகையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில்தான் அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(SEBI) தலைவர் மாதபி புச் தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருப்பதாக ஆகஸ்டு மாதம் ஹிண்டன்பர்க் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்ததாலே அதானி குழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தடாலடியாக கூறியது.
இந்த விவகாரம் பெரிதும் பேசப்பட்டு கொண்டிருக்க, அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு, அதானி நிறுவனம் சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது இந்திய அரசியல் களத்தில் புயலை வீசியது.
அம்பேத்கர் அரசியல்;
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதானியின் முறைகேடு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம் அரசியலமைப்பு சாசனம் சட்டம் குறித்த சிறப்பு விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் கொண்டுவந்த அரசியல் அமைப்பு சட்டத்தை பா.ஜ.க. மாற்ற முயல்வதாக கடுமையாக சாடியது. எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பேசி முடித்த பின்னர் அவர்களது விமர்சனங்களுக்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்” என்றார்.
அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதற்கு பதில் கடவுள் பெயரை சொல்ல வேண்டும் என்று அமித்ஷா கூறுவது அம்பேத்கரை இழுவுப்படுத்துவதற்கு சமம் என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்வினையாற்றி வருகிறது. நாடும் முழுவதும் எதிர்க்கட்சியினர் அமித்ஷாவின் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, “அம்பேத்கர் பிறக்காமல் இருந்திருந்தால் நான் எனது கிராமத்தில் மாடுதான் மேய்த்துக் கொண்டிருந்திருப்பேன்; நீங்கள் உங்கள் சொந்த ஊரில் ஒரு வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கலாம். உங்கள் நண்பர் மோடி இன்னும் ரயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டிருக்கலாம். அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வைதான் நம் அனைவரையும் உயர்த்தியுள்ளது” என்று அமித்ஷாவை சாடினார். அவ்வளவு எளிதில் எதற்கும் விளக்கமளிக்காத பாஜக, அம்பேத்கர் விவகாரத்தில் உள்துறை அமைச்சரே பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்து அமித்ஷா, நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல; அம்பேத்கரின் வரலாற்று புகழை உலக நாடுகள் முழுவதும் கொண்டு சென்றது பாஜக அரசுதான்” என்று உடனடி விளக்கம் கொடுத்தார்.