Skip to main content

குறிவைக்கப்படுகிறாரா பிடிஆர்? - குதூகலத்தில் பாஜகவினர்!

Published on 27/09/2021 | Edited on 04/10/2021

 

WHY PTR PALANIVEL THIYAGARAJAN'S TWEETS ARE HIGHLY CONTROVERSIAL

 

தமிழ்நாட்டில் சித்தாந்தப் போர் வேகமெடுத்துவருகிறது. நீயா நானா என ஆளுக்கொரு திசையில் பயணித்துக்கொண்டிருந்த மாநிலக் கட்சிகள் பலவும் ஓரணியில் திரண்டு பாஜகவை எதிர்த்துக் களமாடிவருகின்றன. ஒன்றிய அரசு - மத்திய அரசு, தமிழகம் - தமிழ்நாடு போன்ற பல்வேறு விவாதங்கள் சுழன்றடிக்கும்போது, மாநில நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பேச்சுகள் தனி ரூட்டில் போய்க்கொண்டிருக்கிறது. பிடிஆரை தூண்டிவிட்டு, எதிர்க்கட்சிகள் எளிதில் காரியம் சாதித்துக்கொள்வதாக திமுகவினர் குறைபட்டுக்கொள்கின்றனர். 

 

துடிப்புடன் ட்விட்டரில் வலம்வரும் பிடிஆர், நெட்டிசன்களின் கேள்விகளுக்குப் பெரும்பாலும் ஜாலியாகவே பதில் தருவார். ஒருமுறை, "பிடிஆர் சார் மாஸ்க் எங்க வாங்குறாருன்னு தெரிஞ்சா, நாமலும் நாலு வாங்கி வைக்கலாம்" என நெட்டிசன் ஒருவர் ட்வீட் போட, "எல்லாமே ஹோம்மேட்தான்.." என தன் மனைவியின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அத்துடன் அவர் வீட்டுச் செல்லப் பிராணியான நாயின் புகைப்படத்தைப் பகிர்ந்து, மனைவி உருவாக்கும் மாஸ்குகளை எல்லாம் கிழிப்பது இந்த 'எடிட்டர்'தான் என கிச்சுகிச்சு மூட்டினார். இப்படி கலகலப்பாக போய்க்கொண்டிருக்கும் பிடிஆரின் ட்விட்டர் பக்கம், அவ்வப்போது சர்ச்சைப் பதிவுகளால் பற்றியெரியும். அப்படி பற்றியெரிந்த சில சம்பவங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

 

சம்பவம் 1:
கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கும், தமிழ்நாட்டு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே ட்விட்டரில் வார்த்தைப் போர் ஏற்பட்டது. உபயம், கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம். இதில் கலந்துகொண்டு பேசிய பிடிஆர், `ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு' என்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் கொள்கை ஏற்கத்தக்கதல்ல என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த வானதி, "பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடந்துகொண்ட விதம் நமது ஜனநாயகத்திற்கு அவமானம். நமது மாநிலத்தின் பெருமையை இந்தச் செயல் கெடுக்கிறது. பிடிஆர் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனப் பதிவிட்டு பிடிஆரை டேக் செய்திருந்தார். 

 

ptr vanathi


இதற்குப் பதில் கூறிய பிடிஆர், "நீங்கள் பிறவிப் பொய்யரா? அல்லது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் யாரோ ஒருவர் யாரையோ அவமதித்துவிட்டதாகக் கருதும் அளவுக்குக் குறைந்த 'ஐக்யூ' கொண்டவரா?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கும் ட்விட்டரிலே பதில் அளித்த வானதி சீனிவாசன், ''உங்களுடைய வார்த்தைகளில் உங்களது அரசியல் முதிர்ச்சி தெரிகிறது. பொதுமக்களைத் தனிப்பட்ட முறையில் அவமதிப்பதுதான் உங்கள் தன்மை'' எனக் கடுகடுத்தார். அத்துடன் நிதியமைச்சர் தன்னை ட்விட்டரில் ப்ளாக் செய்த ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் வானதி பகிர்ந்திருந்தார். ஒரு மாநிலத்தின் நிதியமைச்சர், இந்த விஷயத்துக்கெல்லாம் இவ்வளவு ரியாக்ட் செய்ய வேண்டுமா? அதுவும் அவரை ப்ளாக் செய்யும் அளவுக்கு செல்ல வேண்டுமா? எல்லாருக்கும்தானே அவர் அமைச்சர். அவர் ஏன் இப்படி அவசரப்படுகிறார் என அப்போதே பிடிஆரை நோக்கி விமர்சனங்கள் வீசப்பட்டன.

 

சம்பவம் 2:
கடந்த 17ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பிடிஆரிடம் ஏன் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த பிடிஆர், "ஜிஎஸ்டி கூட்டம் நடக்கும் தேதியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் குறித்த தகவல்களும் தாமதமாகவே கொடுக்கப்பட்டன. ஏற்கனவே பல நிகழ்சிகளுக்கு நேரம் ஒதுக்கியதால் அவற்றை ரத்து செய்ய முடியவில்லை. இப்போது கூட நேரடியாக வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்லவிருக்கிறோம்" இவ்வாறு கூறினார். உடனே, நிதியமைச்சர் பிடிஆர் தன் கொழுந்தியாள் வீட்டு வளைகாப்புக்குச் செல்வதற்காக ஜிஎஸ்டி கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார் என்றும் தனி விமானம் இல்லாததால்தான் கூட்டத்துக்குச் செல்லவில்லை என்றும் வதந்திகள் பரப்பப்பட்டன. இது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "பிடிஆர் சொன்ன அந்தக் காரணத்தைப் பார்த்து தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது. வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால்தான் ஜிஎஸ்டி கூட்டத்துக்குச் செல்ல முடியவில்லை எனச் சொல்பவரா தமிழ்நாட்டுக்கு நிதியமைச்சர்? இதிலிருந்து திமுக அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது" எனக் கூறியிருந்தார்.

ptr madurai

 

உண்மையில், மதுரையில் உள்ள ஒரு மண்டபத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. அதில்தான் பிடிஆர் கலந்துகொண்டார். ஆனால், இது தவறாக திரித்து வெளியிடப்பட்டது. இதுகுறித்து பதிலளித்த பிடிஆர், அது உறவினர் வீட்டு விழா இல்லை என்றும் சமுதாய வளைகாப்பு விழா என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், தனக்கு கொழுந்தியாள் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், வாதப்பிரதிவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. அதனால் கடுப்பான பிடிஆர், ஆத்திரத்துடன் அனைவருக்கும் பதிலடி கொடுத்தார். இப்படிப் போகிறபோக்கில் ஒரு சாமானியன் போலப் பேசுவது அமைச்சரின் மாண்புக்கு அழகா எனும் விமர்சனங்கள் பொதுவெளியில் எழுப்பப்பட்டன. மேலும், அண்ணாமலையின் விமர்சனத்துக்குப் பதில் கூறி ட்வீட் போடும்போது, ஸ்கிசோஃப்ரினிக் (schizophrenic) எனும் வார்த்தையைப் பயன்படுத்தினார். 'அண்ணாமலை என்னதான் எதிர் அரசியல் செய்பவராக இருந்தாலும், இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டாமே பிடிஆர் சார்' என அவரது ஆதரவாளர்களே பொதுவெளியில் குமுறினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

annamalai vs ptr

 

சம்பவம் 3:
பாஜகவினரை போலவே அதிமுகவினரும் அமைச்சர் பிடிஆரின் ட்வீட்டுகளை மேற்கோள் காட்டி விமர்சித்துவருகின்றனர். அதன்படி, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரும் ட்விட்டர் போரில் ஐக்கியமானார். அவரின் ட்விட்டர் பதிவில், "ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் கலந்துகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. நான் 30க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன்.

 

 

நிதியமைச்சராக தனது கடமையைச் செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா? தம்பி.. பிடிஆர்.. கவனத்தில் கொள்" எனக் கூறியிருந்தார். அதற்குப் பதில் அளித்த பிடிஆர், "இதுவரை ஜிஎஸ்டி கவுன்சிலின் எத்தனை அறிக்கைகளை நீங்கள் படித்துள்ளீர்கள். 30 ஜிஎஸ்டி கூட்டங்களில் கலந்துகொண்டதாகச் சொல்கிறீர்களே, தமிழகம் சார்பில் சமர்ப்பித்த அறிக்கைகளில் ஒரு வார்த்தையாவது நீங்கள் எழுதியதுண்டா? இல்லை, வணிக வரித் துறை தாக்கல் செய்த அறிக்கைகளையாவது நீங்கள் படித்துள்ளீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒருபக்கம் புகைந்துகொண்டிருக்க சற்றும் எதிர்பாராமல் திமுகவினரையே அதிரவைத்தது இன்னொரு ட்வீட்.

 

சம்பவம் 4:
"வயதான முட்டாள், 2 கிலோ இறால் மீனுக்கு விலை போகக் கூடியவர். இதுவரை இரண்டு முறை கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டவர்" என்று பெயரைக் குறிப்பிடாது ஒரு ட்வீட் போட்டார் பிடிஆர். ஆனால், ட்வீட் போடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அது நீக்கப்பட்டது. அந்த ட்வீட்டை அவர் நீக்கினாலும், பாஜகவினர் அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துவைத்துக்கொண்டு விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் பிடிஆர் ட்வீட்டில் குறிப்பிட்ட அந்த நபர், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்தான் எனும் செய்தி காட்டுத்தீயாய்ப் பரவியது. அதற்கு ஆதாரமாய், அவர்தான் இரண்டுமுறை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் பரப்பப்பட்டது. இதுவரை பிடிஆருக்கு ஆதரவாகப் பேசிவந்த திமுகவினரே இப்போது என்ன செய்வது எனத் தலையைப் பிய்த்துக்கொண்டனர். ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த டிகேஎஸ், "பிடிஆர் ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். அவர் எளிதில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிடுகிறார்" எனக் கூறினார். இதற்குப் பதிலடி தருவதாக நினைத்தே பிடிஆர் அவசரம் அவசரமாக விமர்சித்துவிட்டார் எனக் கூறப்படுகிறது. இது அறிவாலயத்துக்குள் அனலைக் கிளப்பியுள்ளது.

 


தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். உலகப் பொருளாதார அறிவு பெற்றவராகவும் திராவிடப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவராகவும் அறியப்படும் பிடிஆருக்கு உரிய அங்கீகாரமாக நிதித்துறையை வழங்கி அழகு பார்த்தார் ஸ்டாலின். தலைமுறை பணக்காரரான பிடிஆர் வசம் நிதித்துறையை ஒப்படைத்தால், அதில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்காது என்றும் பிடிஆரின் பொருளாதார அறிவு தமிழ்நாடு வளர்ச்சிக்குப் பயன்படும் என்றும் ஸ்டாலின் கணக்குப் போட்டார். ஸ்டாலினின் கால்குலேஷன் என்னவோ ஓரளவுக்கு சக்சஸ்தான், ஆனால் பிடிஆரை வைத்து பாஜக புதுக் கணக்கு போட்டுவருவதாகவும் அதற்கு பிடிஆர் இரையாகிவருவதாகவும் புலம்புகின்றனர் கழக உடன்பிறப்புகள்.