'நாங்க ஜெயிச்சிட்டோம் ஜெயிச்சிட்டோம் ஹேய்' என்று ஹாயாக மேப்பை வைத்து டூர் அடித்துக்கொண்டிருந்த டோரா ஒரு சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகள் (மீம்) பரவலாக பரவின. டோரா ரசிகர்கள் எல்லோரும் இச்செய்திகளைப் பார்த்து டோரா ரசிகர்கள் வருத்தமுற்று இருக்கின்றனர். "யார் இந்த டோரா?" என்று கேட்டால், "டோராதான் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு மேப் பார்க்க சொல்லிக்கொடுத்தது, வீட்டை விட்டு தைரியமா வெளில போய்ட்டு வர கற்றுக்கொடுத்தது. டோரா என்னதான் தைரியசாலியா இருந்தாலும் கூடவே புஜ்ஜியையும் வச்சுக்கிட்டுதான் ஊரு சுத்துவாங்க, அவ்வளவு நல்ல மனசு டோராவுக்கு" என்று லிஸ்ட் போடுவார்கள் டோரா ரசிகர்கள்.

இவ்வளவு நல்ல மனசு, தைரியம் உள்ள ஒரு பெண்ண தாக்குறதுக்கு யாருக்குத்தான் மனசு வரும்? "வரும், அவனுக்குக் கண்டிப்பா வரும்" என்று பல்லை கடித்துக்கொண்டு எல்லோரும் குள்ள நரியை சொல்கிறார்கள். ஆமாம், குள்ளநரிதான் டோராவை தாக்கியிருப்பதாகவும், அதனால்தான் காயமடைந்து சீரியஸ் நிலையில் இருக்கும் டோரா தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர். டோராவுக்கு இவ்வாறு ஏற்பட்டுள்ளதால் கொந்தளித்துள்ள ரசிகர்கள் மருத்துவமனை முன்பு 'புதிய கீதை' படத்தில் விஜய்க்காக வேண்டுவது போல் வேண்டிக்கொள்கிறார்கள்.

இன்னும் சிலரோ மருத்துவமனையில் இருக்கும் டோராவின் புகைப்படத்தைக் கேட்டு கோஷம் எழுப்புகின்றனர். ஏற்கனவே இதுபோன்று தமிழகத்தில் நடந்திருப்பதால் எங்களுக்கு ஏதேனும் ஆதாரம் வேண்டும் என்கின்றனர். டோரா மறைந்துவிட்டதாக வதந்திகள் பரவுவதால், அவர்களின் நெருங்கிய நண்பரான சோட்டா பீமுக்கு விஷயம் தெரிந்து பெரிய கலவரம் ஏற்படும் என்பதால் டோலாக்பூரில் இணையம் முடக்கப்பட்டுள்ளது. தற்போது டோராவின் நிலையைத் தெரிந்து கொண்டு அகில உலக கார்ட்டூன் ஸ்டார் ஷின்சான், தலையில் தீச்சட்டி ஏந்தி வேண்டுதல் நடத்தும் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. துணை வட்டாட்சியரின் ஆணைக்கு இணங்க குள்ளநரியை சுட்டுத்தள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டோரா கோக் குடிப்பது போன்று ஒரு புகைப்படம் வெளியாகி பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது.









இதெல்லாம் என்ன? எங்கே நடக்கிறது என்று கேட்பவரா நீங்கள்? 'டோரா' என்பது நயன்தாரா படத்துக்கு தலைப்பாக வைக்கும் அளவுக்கு, பல திரைப்பட பாடல்களில் இடம் பெரும் அளவுக்கு குழந்தைகள், பெரியவர்கள் மத்தியில் புகழ் பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரம்.
இதுவரை சொல்லப்பட்ட அனைத்தும் 'டோரா'வை மையமாக வைத்து 'save dora', 'pray for dora' என்றெல்லாம் ஹேஷ்டேக் போட்டு, கற்பனை கதையாக, தமிழ்ச் சமூக வலைத்தள உலகில் மீம்களாக போட்டிபோட்டுக்கொண்டு பதிவிடப்பட்டு வருகின்றன. இதில் என்ன விஷயம் என்றால் டோரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என்று விளையாட்டாக பதிவிடப்பட்டதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை ஒப்பிட்டும், தற்போது தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த துணை வட்டாட்சியர் அனுமதி கொடுத்த செய்தியை கேலி செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களை டோராவின் மூலம் கேலிசெய்து விமர்சித்து வருகின்றனர். இதுவரை 'குள்ளநரி என்ற திருடனை கண்டுபிடித்துக் கொடுங்கள்' என்று டோரா நம்மிடம் உதவி கேட்டது போல, நாம் டோராவின் உதவியின் மூலம் சமூகத்தில் நடக்கும் கேலிக்கூத்தான விஷயத்தை கலாய்த்து வருகிறோம்.
உண்மையில் 'டோரா' கதாபாத்திரம் இறக்கவும் இல்லை. அப்படி கார்டூனில் அவர்கள் எடுக்கவும் இல்லை. தீவிர சிகிச்சையில் இருப்பது போன்று உள்ள படம் ஒரு மொபைல் கேம்மில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த கேமில் டோராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும், அதற்கு வைத்தியம் பார்த்து குணமடைய செய்யவேண்டும். இதுதான் கேம் விதி. அந்த படத்தை வைத்துதான் சோசியல் மீடியா இப்படி விளையாடி வருகிறது. டென்ஷனாகிறதா? அமைதி... அமைதி... அமைதியோ அமைதி...