

கடந்த சில மாதங்களாக பெரும் அரசியல் களேபரங்களுடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது இணைய உலகம் இந்தியாவின் மாபெரும் தேர்தல் காய்ச்சல் இப்பொழுதுதான் சற்று குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
இதனை உணர்த்தும் வகையில் தமிழர்கள் என்ற #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். இது தமிழர்களின் நகைச்சுவை உணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது.
யார் நேசமணி என்ன ஆனது நேசமணிக்கு:
ஃப்ரெண்ட்ஸ் படத்தில் பெயிண்டிங் காண்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் கதாப்பாத்திரத்தின் பெயர்தான் நேசமணி. அதில் வரும் ஒரு நகைச்சுவைக் காட்சியில் வடிவேலுவின் தலையில் 'சுத்தியல்' விழுவது போன்று வரும் நகைச்சுவைக் காட்சி மிகப் பிரபலம்.
அது இப்பொழுது இணையத்தில் ட்ரெண்ட் ஆகக் காரணம்,
முகநூலில் இருவர் செய்த கமெண்ட் தான்,
ஒரு வெளிநாட்டு முகநூல் பக்கம் 'சுத்தியல்' படத்தை பதிவிட்டு இதன் பெயர் உங்கள் நாட்டில் என்ன என்பது போல ஒரு பதிவை போட..
அந்தப் பதிவின் கமெண்ட் பகுதியில் ஒருவர் இந்த நகைச்சுவைக் காட்சியைக் கூறவே. வட இந்தியர் ஒருவர் அதை உண்மை என நினைத்து #pray_for_nesamani என்று பதிலுக்கு கமெண்ட் செய்ய விஸ்வரூபம் எடுத்தது #Pray_For_Nesamani.
இந்திய அளவில் 87000க்கும் அதிகமானோர் இந்த ஹேஷ்டேகைப் பயன்படுத்தியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய அளவில் முக்கியமான பிரபலங்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு இந்த ஹேஷ்டேக் உடன் பதிவிட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் இதே நகைச்சுவை காட்சியின் ஒலியை அவெஞ்சர்ஸ் திரைக் காட்சியோடு இணைத்து விக்னேஷ் என்பவர் எடிட் செய்த வீடியோ ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் மற்றும் இந்திய அரசியல் களம் மிக பரபரப்பாகவும் இறுக்கத்துடனும் சென்றுகொண்டிருக்கும் வேளையில் இது போன்ற சிறிய இளைப்பாறும் நிகழ்வுகளை தட்டிக் கழித்து விடாமல் அந்த கொண்டாட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வதே சிறப்பு என்கின்றனர் சில இணையவாசிகள்.
'மீம்ஸ் தேசத்தின் முடிசூடா மன்னன்' என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல வடிவேலு என்னும் கலைஞனால் போர்க்களத்திலும் புன்னகைகள் பூக்கும்.