அமமுக தலைமை மீது கடும் விமர்சனம் செய்த தங்க தமிழ்செல்வன், தனக்கு ரெஸ்ட் தேவை, சில காலம் அமைதியாக இருக்கப்போகிறேன் என்று மீடியாக்களிடம் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
இதுதொடர்பாக நம்மிடம் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார் அரசியல் விமர்சகரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத்.
அமமுக பாதாளத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. அழிவின் விளிம்பில் நிற்கிறது. சரிவின் விரிவில் நிற்கிறது. அதனுடைய அழிவை யார் நினைத்தாலும் இனிமேல் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு கொள்கை சார்ந்த அமைப்பாக அதனை கட்டி அமைக்க வேண்டும் என்று அந்த கட்சியினுடைய தலைமை பொறுப்பில் இருக்கிறவர் இதுவரைக்கும் சிந்திக்கவில்லை. ஒரு மிகப்பெரிய தோல்வியை தமிழ்நாட்டில் பெற்ற பிறகுகூட இந்த தோல்விக்கான காரணம் என்னவென்று இதுவரைக்கும் அவர் யோசிக்கவில்லை. டிடிவி தினகரனால் அமமுகவை நடத்துவதற்கு முடியாது. காலப்போக்கில் அந்த கட்சி கல்லறைக்கு போய்விடும்.
சில நிர்வாகிகள் செல்வதால் இந்த இயக்கம் போய்விடாது. நடந்து முடிந்த தேர்தலில் 3வது இடத்தை பிடித்துள்ளோம். வாக்களித்த அனைத்து தொண்டர்களுமா சென்றுவிட்டனர் என்கிறாரே புகழேந்தி...
செந்தில் பாலாஜி ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். கரூர் மாவட்ட அரசியலை தீர்மானிக்கக்கூடிய இடத்தில் இருப்பவர். அந்த மாவட்டத்தில் திமுக ஜாம்பாவனாக இருக்கிற அண்ணன் கே.சி.பி.யை எதிர்த்து அரவக்குறிச்சியில் வாகை சூடியவர். செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றதால் கரூர் மாவட்டத்தில் அமமுக இன்று அஸ்தமனத்தை சந்தித்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து தங்க தமிழ்செல்வன். எம்பியாக இருந்தவர். ஆண்டிப்பட்டி எம்எல்ஏவாக இருந்தவர், அந்த மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர். அவருக்கு பின்னால் இன்று பல சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் சென்றுள்ளனர். இவர்கள் போவதால் எந்த இழப்பும் இல்லை என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்.
அமமுகவில் இருந்து வருபவர்களை வரவேற்று ஆர்வத்துடன் திமுக சேர்த்துக்கொள்வது புரியவில்லை. அமமுகவை ஒழிக்கலாம், அழிக்கலாம் என்று நினைக்கிறார்களா என்பது புரியவில்லை என்கிறாரே புகழேந்தி...
அவருடைய உள்ளத்தில் இருப்பது ஒன்று. உதட்டில் இருப்பது ஒன்று. அவரும் அங்கே இருக்க முடியாது. இயங்க முடியாது. அவரும் வெளியேறிவிடுவார்.
அமமுகவில் இருப்பவர்கள் அதிமுகவில் இருந்தவர்கள். அமமுக தலைமை பிடிக்கவில்லை என்றால் அதிமுக செல்லாமல், திமுகவுக்கு ஏன் வருகிறார்கள்...
அதிமுக தற்போது தாய் கழகமாக இல்லை. பிஜேபி என்கிற கட்சியின் அடிமையாக பேய் கழகமாக மாறி வருகிறது. அதனால் அங்கு செல்ல விரும்பாமல் திமுகவுக்கு வருகின்றனர்.