மிரட்டிய ஐ.டி. ரெய்டை ஒரு வழியாக சமாளித்து, "மாஸ்டர்'’படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார் விஜய். ஷூட்டிங்கின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் டைரக்டர் லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டரின் வில்லன் விஜய் சேதுபதி மற்றும் டெக்னீஷியன்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்து அசத்தினார் விஜய்.
விருந்தெல்லாம் அமர்க்களமாக முடிந்து "மாஸ்டர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த ஆயத்த வேலைகளை ஆரம்பித்த போதுதான்... விஜய்க்கு அக்கப்போரும் ஆரம்பமானது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விழாவை நடத்த அனுமதி கேட்டவுடனேயே நோ சொல்லிவிட்டது அரசு தரப்பு. அதன்பின் தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரி நிர்வாகத்தை தயாரிப்பாளர் தரப்பு அணுகியது. ஆனால் "பிகில்'’பட ஆடியோ விழாவுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, அதன் பின் அரசாங்கத்தால் வந்த நெருக்கடி கண்முன்னே நிழலாடியதால் சாய்ராம் கல்லூரியும் "சாரி சார்' என சொல்லி விட்டது.
"சென்னை சரிப்பட்டு வராது போலிருக்கே' என்ற யோசனையுடன் கோவை இந்துஸ்தான் கல்லூரிக்குப் போன போது சாய்ராம் கதை எங்களுக்கும் தெரியும் என்றது இந்துஸ்தான். ஆடியோ விழாவை நடத்துவதற்கு பலவகையிலும் மாஸ்டர் மல்லுக் கட்டுவதற்கு காரணம், விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், தனியார் தொலைக் காட்சி ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டு பேசும்போது, ""ஐ.டி.ரெய்டு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ‘மாஸ்டர்’ ஆடியோ விழாவில் விஜய் பதில் சொல்வார்'' என சொன்னதுதான்.
பார்த்தார் விஜய், எதுக்கு இந்தக் குடைச்சல், ஏன் இந்த அலைச்சல்... இருக்கவே இருக்கு சன் டி.வி. அவர்களிடமே பேசுவோம் என்ற முடிவுடன் கலாநிதிமாறனிடம் பேசியுள்ளார். மாஸ்டரை 27 கோடி ரூபாய்க்கு சன் டி.வி. வாங்கியிருப்பதால் கலாநிதிமாறனும் டபுள் ஓ.கே. சொல்லிவிட்டார். இதனால் சன் டி.வி. அருகிலேயே உள்ள ஃபைவ் ஸ்டார் ஓட்டலான லீலா பேலஸில் 500 பேர் மட்டுமே அமரக்கூடிய ஹாலில் ஆடியோ விழாவை நடத்தி அதை நேரடி ஒளிபரப்பும் செய்யும் முடிவுக்கு வந்துள்ளதால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் விஜய்.
அவர் நடித்த மற்ற கம்பெனி படங்களின் ஆடியோ விழாக்களுக்கு பெரும் செலவு செய்தனர். அதில் விஜய் பேசுவது ஒரு தரப்பில் பட்டையைக் கிளப்ப, இன்னொரு பக்கம் பிரச்சினையைக் கிளப்பும். தயாரிப்புத் தரப்பு பதட்டமாகும். "மாஸ்டர்' படத்தை தனது சித்தப்பாவே தயாரித்திருப்பதால் சிக்கன செலவு, ரசிகர்களை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்ப்பது என ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விஜய், நேரடி ஒளிபரப்பு என்றால் போலீஸ் பெர்மிஷன் தேவையில்லை என்ற கணக்கும் போட்டுள்ளார்.
-ஜெ.தாவீதுராஜ்